இதர பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு விவகாரம்: முதல்-அமைச்சரின் சொல் ஒன்று, செயல் வேறு சிவா எம்.எல்.ஏ. கண்டனம்


இதர பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு விவகாரம்: முதல்-அமைச்சரின் சொல் ஒன்று, செயல் வேறு சிவா எம்.எல்.ஏ. கண்டனம்
x
தினத்தந்தி 10 Aug 2020 4:03 AM IST (Updated: 10 Aug 2020 4:03 AM IST)
t-max-icont-min-icon

இதர பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு விவகாரத்தில் முதல்-அமைச்சரின் சொல் ஒன்று, செயல் வேறு ஆக உள்ளது என்று சிவா எம்.எல்.ஏ. கண்டனம் தெரிவித்தார்.

புதுச்சேரி, 

மாநிலங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக வழங்கப்படும் இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (ஓ.பி.சி.) 50 சதவீத இடஒதுக்கீடு மறுக்கப்பட்டது. அந்த இட ஒதுக்கீட்டை பெற தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். புதுச்சேரியிலும் இடஒதுக்கீடு பெற தெற்கு மாநில தி.மு.க. சார்பில் நானும் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தேன். அந்த வழக்கில் கடந்த மாதம் 27-ந் தேதி தீர்ப்பு அளிக் கப்பட்டது.

வழக்கு விவாதத்தின் போது, தமிழகத்தில் நிலுவையில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று தி.மு.க. சார்பில் வாதம் செய்யப்பட்டது. ஆனால் புதுச்சேரி அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் புதுச்சேரியில் பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவிகளுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டு உரிமையை 27 சதவீதமாக குறைத்து மத்திய அரசு பின்பற்றிக் கொள்ளலாம் என்று கூறியுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

திரும்ப பெற வேண்டும்

புதுச்சேரி அரசு இட ஒதுக்கீட்டில் கொள்கை முடிவு எடுத்து 33 சதவீதத்தை இதர பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு அமல்படுத்தி வருகிறது. அதை 27 சதவீதமாக குறைத்துக் கொள்ளும் வகையில் முடிவு எடுத்ததற்கான பின்னணி குறித்து விசாரித்து அரசின் கொள்கையை மீறி செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதுச்சேரியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, எங்கள் அரசு எப்போதும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு, தாழ்த்தப்பட்டவர்களுக்கு, சிறுபான்மையின மக்களுக்கு எனக்கூறி வருகிறார். ஆனால் நீதிமன்றங்களுக்கும், மத்திய அரசுக்கும் அனுப்பும் அறிக்கைகள், பதில்களில் தனது சொல்லிற்கும், பேச்சுக்கும் மாறான தகவல்களை பதிவு செய்து வருகிறார்.

இந்த வழக்கு சுப்ரீம்கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டால் அப்போது புதுச்சேரி அரசு சார்பில் ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்ட பதிலை திரும்பப்பெற்று, ஏற்கனவே உள்ள 33 சதவீத இட ஒதுக்கீட்டையே மருத்துவ கல்வியில் பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு வழங்க வேண்டும். அதை நடைமுறைக்கு கொண்டுவர முயற்சிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story