கிருஷ்ணாபுரம் அணையில் இருந்து உபரிநீர் திறப்பு: கொசஸ்தலை ஆற்றில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்
ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரம் அணைப்பகுதியில் பெய்த மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்தது. உபரி நீர் திறக்கப்பட்டதால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
பள்ளிப்பட்டு,
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரம் என்ற இடத்தில் இரு மலைகளுக்கு இடையே அந்த மாநில அரசு அணை கட்டி மழைநீரை தேக்கி சேமித்து வருகிறது. இந்த அணையின் முழுநீர் மட்டம் 199 மில்லியன் கன அடியாகும்.
தற்போது அணை அமைந்துள்ள பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் அணையின் நீர் மட்டம் தற்போது 190 மில்லியன் கன அடியாக உயர்ந்துள்ளது. மேலும் அணைக்கு தண்ணீர் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது.
இதையடுத்து அணையில் இருந்து உபரி நீரை கொசஸ்தலை ஆற்றில் திறந்து விட ஆந்திர மாநில அதிகாரிகள் முடிவு செய்தனர். இது குறித்து அவர்கள் பள்ளிப்பட்டு வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
வெள்ளம் கரை புரண்டு ஓடியது
நேற்று அதிகாலை அணையின் இரு மதகுகளில் இருந்து உபரிநீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டது. அணையில் இருந்து சீறி பாய்ந்து வந்த தண்ணீர் நேற்று காலை 6 மணியளவில் பள்ளிப்பட்டு கொசஸ்தலை ஆற்றில் கலந்து வெள்ளமாக கரை புரண்டு ஓடியது.
இதனால் பள்ளிப்பட்டு பஜார் தெரு விரிவாக்கம் பகுதியில் இருந்து கீழ்கால்பட்டடை கிராமத்திற்கு செல்லும் வழியில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் குறுக்கே உள்ள தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது. இதன் காரணமாக வெளிகரம், கீழ்கால்பட்டடை, வெங்கடராஜூகுப்பம் ஆகிய கிராமங்களுக்கு கிராமத்தினர் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.
Related Tags :
Next Story