முழு ஊரடங்கு: நாகை மாவட்டத்தில் கடையடைப்பு -- மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடின


முழு ஊரடங்கு: நாகை மாவட்டத்தில் கடையடைப்பு -- மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடின
x
தினத்தந்தி 10 Aug 2020 3:30 AM IST (Updated: 10 Aug 2020 6:25 AM IST)
t-max-icont-min-icon

முழு ஊரடங்கையொட்டி நேற்று நாகை மாவட்டத்தில் கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

பாலையூர், 

நாடெங்கும் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் காரணமாக ஜூலை மாதம் முழுவதும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. அதன்படி ஆகஸ்டு மாதம் முழுவதும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்தநிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமையையொட்டி நாகை மாவட்டம் குத்தாலம், பெரம்பூர், பாலையூர், மங்கைநல்லூர், கோமல், தேரழுந்தூர் திருவாவடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் அத்தியாவசிய கடைகள் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. குத்தாலம் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வணிக வளாகங்கள், கடைகள் மூடப்பட்டு இருந்தன. இதனால் குத்தாலம் கடைவீதி பகுதியில் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

இதேபோல் நாகை புதிய மற்றும் பழைய பஸ்நிலையங்கள், கடைத்தெரு, நீலாவீதிகள், அண்ணாசிலை, பப்ளிக் ஆபீஸ் சாலை, நாகூர் மெயின் ரோடு ஆகிய இடங்களில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது. அப்போது சாலைகளில் தேவையில்லாமல் சுற்றி திரிந்தவர்களை போலீசார் பிடித்து அவர்களுக்கு அபராதம் விதித்தனர். நாகை மாவட்டத்தில் 4 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன. அதேபோல் வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய இடங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததால் சாலைகள் வெறிச்சோடி கிடந்தன.

Next Story