ஊரப்பாக்கம் ஊராட்சியில் முழு ஊரடங்கை மீறி இறைச்சி விற்பனை; கடைக்கு சீல்
ஊரப்பாக்கம் ஊராட்சியில் முழு ஊரடங்கை மீறி இறைச்சி விற்பனை; கடைக்கு சீல்.
வண்டலூர்,
கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையும் மீறி செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மீன், இறைச்சி விற்பனை நடைபெற்று வந்தது. இதனை தடுக்கும் வகையில் நேற்று முழு ஊரடங்கு என்பதால் செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் ஏராளமான போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஊரப்பாக்கம் ஊராட்சியில் உள்ள அய்யஞ்சேரி மெயின் ரோடு பகுதியில் கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு தாமஸ் என்பவர் ஊரடங்கு உத்தரவை மீறி கடையை திறந்து இறைச்சி விற்று கொண்டிருந்தார். இது குறித்து உடனடியாக கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர், வண்டலூர் தாசில்தார் செந்திலுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாசில்தார், ஊரடங்கை மீறி இறைச்சி விற்பனை செய்த கடை உரிமையாளர் தாமசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார். கடையை இழுத்து மூடி சீல் வைத்தார்.
இது குறித்து உயர் போலீஸ் அதிகாரி கூறும்போது:-
ஊரடங்கு உத்தரவை மீறி சாலை ஓரங்களில் அல்லது கிராமப்புறங்களில் மறைவான இடங்களில் அல்லது வீட்டிலேயே இறைச்சி விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story