முழுஊரடங்கால் நெல்லை முடங்கியது தூத்துக்குடி, தென்காசியில் கடைகள் அடைப்பு; சாலைகள் வெறிச்சோடின
முழுஊரடங்கால் நேற்று நெல்லை முடங்கியது. தூத்துக்குடி, தென்காசியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. சாலைகள் வெறிச்சோடின.
தென்காசி,
தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஜூலை மாதம் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதேபோல் இந்த மாதமும் (ஆகஸ்டு) அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. ஏற்கனவே முதல் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று 2-வது ஞாயிற்றுக்கிழமையும் தளர்வு இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இதையொட்டி நெல்லை மாவட்டத்தில் நேற்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. காய்கறி, மளிகை கடைகள் மற்றும் இறைச்சி கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. பால், மருந்து கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் மட்டும் திறந்திருந்தன. இதனால் கடைவீதிகளில் மக்கள் நடமாட்டம் இன்றி நெல்லை முடங்கியது.
சாலைகள் வெறிச்சோடின
பொதுமக்கள் தங்களது வீட்டை விட்டு வெளியே வராமல் டி.வி. பார்த்தும், குழந்தைகளுடன் விளையாடியும் மகிழ்ந்தனர். சாலைகளில் வாகனங்களை பார்க்க முடியவில்லை. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
நெல்லையில் வண்ணார்பேட்டை ரவுண்டானா, கொக்கிரகுளம் எம்.ஜி.ஆர். சிலை, சந்திப்பு அண்ணா சிலை, பாளையங்கோட்டை, டவுன், மேலப்பாளையம், தச்சநல்லூர் உள்ளிட்ட முக்கிய சந்திப்பு பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். முழுஊரடங்கை தீவிரமாக அமல்படுத்தும் வகையில் ரோந்தும் சுற்றி வந்தனர். ஊரடங்கை மீறி வெளியே வந்தவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்கள் பயன்படுத்திய வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் நெல்லை மாவட்டம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடி கிடந்தது.
தென்காசி
தென்காசியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. வழக்கமாக பரபரப்பாக காணப்படும் சுவாமி சன்னதி பஜார், அம்மன் சன்னதி பஜார், ரத வீதிகள், கன்னிமாரம்மன் கோவில் தெரு, கீழ ஆவணி மூல வீதி, கூலக்கடை பஜார் உள்பட அனைத்து பகுதிகளும் ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.
பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் தங்களது வீடுகளுக்கு உள்ளேயே முடங்கி இருந்தனர். மருந்து கடைகள் மட்டும் திறந்திருந்தன. போலீசார் ஆங்காங்கே நின்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் மற்றும் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள கடைகள் மூடப்பட்டு இருந்தன. அதேபோன்று வாகன போக்குவரத்தும் முற்றிலும் முடங்கியது. ஆங்காங்கே ஒரு சில லாரிகள் மட்டும் இயங்கின. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
அதேபோன்று பொதுமக்களும் சிலர் வாகனங்களில் சுற்றியபடி இருந்தனர். அவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மடக்கி பிடித்து வழக்குப்பதிவு செய்தனர். சிலருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story