கிருஷ்ணகிரியில் 60 பேருக்கு தொற்று உறுதி: சேலத்தில் மேலும் 165 பேருக்கு கொரோனா - தர்மபுரியில் கலால் உதவி ஆணையாளர் உள்பட 26 பேர் பாதிப்பு


கிருஷ்ணகிரியில் 60 பேருக்கு தொற்று உறுதி: சேலத்தில் மேலும் 165 பேருக்கு கொரோனா - தர்மபுரியில் கலால் உதவி ஆணையாளர் உள்பட 26 பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 10 Aug 2020 3:45 AM IST (Updated: 10 Aug 2020 7:32 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் நேற்று மேலும் 165 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. கிருஷ்ணகிரியில் 60 பேருக்கும், தர்மபுரியில் கலால் உதவி ஆணையாளர் உள்பட 26 பேரும் பாதிக்கப்பட்டனர்.

சேலம்,

சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 55 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்த நிலையில் நேற்று மேலும் 165 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது சேலம் மாநகராட்சி பகுதியில் 113 பேர், புறநகர் பகுதிகளில் 46 பேரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கடலூர், நாமக்கல், தூத்துக்குடி, அரியலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து சேலம் மாவட்டத்திற்கு வந்த 4 பேரும், பீகார் மற்றும் மராட்டிய மாநிலத்தில் இருந்து சேலத்திற்கு வந்த 2 பேரும் என மொத்தம் நேற்று ஒரே நாளில் 165 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் இதுவரை 4,622 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 3,492 பேர் குணமடைந்து டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இன்னும் 1,078 பேர் நோய் பாதிப்பால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளன. அதன்படி ஓசூரில் அதிகபட்மாக 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கிருஷ்ணகிரியில் 7 பேர், தேன்கனிக்கோட்டையில் 8 பேர், தளியில் 3 பேர், பர்கூரில் 2 பேர், காவேரிப்பட்டணத்தில் 3 பேர், கெலமங்கலத்தில் 3 பேர், சூளகிரியில் 3 பேர், அஞ்செட்டியில் 3 பேர், பாகலூர், பேரிகை, ஊத்தங்கரையில் தலா ஒருவர் என 7 மற்றும் 4 வயது சிறுவர்கள் உள்பட 36 ஆண்களும், 24 பெண்களும் என நேற்று ஒரே நாளில் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளன. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 1,441 ஆக உயர்ந்துள்ளன.

தர்மபுரியில் உள்ள கலால் அலுவலகத்தில் உதவி ஆணையாளராக பணிபுரியும் 53 வயது பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதியானது. தர்மபுரி நாட்டறம்பள்ளியை சேர்ந்த 44 வயது ஆசிரியர், கோட்டப்பட்டியை சேர்ந்த 27 வயது பெண் ஆசிரியை, கோபிநாதம்பட்டி கூட்ரோடு போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் 46 வயது போலீஸ்காரர் என தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம் 26 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

தர்மபுரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 870 ஆக உயர்ந்து உள்ளது. இதே போல நாமக்கல் மாவட்டத்தில் நேற்று டாக்டர் உள்பட 35 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியானதால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 991 ஆக உயர்ந்து உள்ளது.

Next Story