பெரம்பலூரில், நகராட்சி இடத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விநாயகர் சிலை அகற்றம்- போலீசார் குவிப்பு


பெரம்பலூரில், நகராட்சி இடத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விநாயகர் சிலை அகற்றம்- போலீசார் குவிப்பு
x
தினத்தந்தி 10 Aug 2020 3:15 AM IST (Updated: 10 Aug 2020 8:01 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூரில், நகராட்சி இடத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை அகற்றப்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

பெரம்பலூர், 

பெரம்பலூர் நகராட்சி 6-வது வார்டுக்கு உட்பட்ட வெங்கடேசபுரம் வடக்கு பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் பின்புறம், நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அனுமதியின்றி விநாயகர் சிலை வைக்கப்பட்டு, அந்த பகுதி மக்களால் வழிபாடு நடத்தப்பட்டு வந்தது. அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலையை அகற்றக்கோரி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு புகார் வந்தது.

இதையடுத்து நேற்று அதிகாலை மாவட்ட நிர்வாகம் உத்தரவின்பேரில், நகராட்சி பணியாளர்கள் மற்றும் வருவாய்த்துறையினர் போலீஸ் பாதுகாப்புடன் அந்த விநாயகர் சிலையை அகற்றினர். மேலும் சிலை அமைக்கப்பட்டிருந்த இடம் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. அகற்றப்பட்ட விநாயகர் சிலை பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

விநாயகர் சிலை அகற்றப்பட்டதை தொடர்ந்து, அந்த இடத்தில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு பணிக்காக பெண் போலீசார் உள்ளிட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை அகற்றப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story