திருச்சி மாவட்டத்தில், முழு ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடின


திருச்சி மாவட்டத்தில், முழு ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடின
x
தினத்தந்தி 10 Aug 2020 3:00 AM IST (Updated: 10 Aug 2020 9:19 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி மாவட்டத்தில் முழு ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடின.

திருச்சி,

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை தோறும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஆகஸ்டு மாதத்தில் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையான நேற்று திருச்சியில் முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது.

இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் பாலக்கரை மெயின்ரோடு, மெயின்கார்டு கேட், சத்திரம் பஸ் நிலையம், பெரிய கடைவீதி பகுதிகளில் உள்ள சாலைகள் எல்லாம் வெறிச்சோடி காணப்பட்டன. இதே போல் மதுரை, சென்னை, திண்டுக்கல் செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளிலும் வாகனப்போக்குவரத்து என்பது மிக அரிதாக இருந்தது.

பல இடங்களில் சாலைகள் வாகன ஓட்டம் இன்றி இருந்ததால் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடினார்கள். சிலர் சாலைகளில் ஸ்கேட்டிங் விளையாட்டில் ஈடுபட்டனர். முழு ஊரடங்கின் காரணமாக திருச்சி என்.எஸ்.பி சாலை, பெரிய கடைவீதி, காந்திமார்க்கெட், மயிலஞ்சந்தை பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. மருந்து கடைகள், மருத்துவமனைகள் மட்டும் திறந்து வைக்கப்பட்டு இருந்தன.

ஊரடங்கு உத்தரவை மீறி சாலையில் இருசக்கர வாகனங்களில் உலாவந்தவர்களை போலீசார் மடக்கி அபராதம் விதித்தனர். அத்தியாவசிய பணிக்காக சென்றவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.

இதுபோல் எப்போதும் பரபரப்பாக காணப்படும் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சமயபுரம் சுங்கச் சாவடியில் போக்குவரத்து இல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டது. இதேபோல் சமயபுரம், மண்ணச்சநல்லூர், திருப்பைஞ்சீலி, மணப்பாறை, வையம்பட்டி, துவரங்குறிச்சி, லால்குடி, துறையூர், தொட்டியம், முசிறி, தா.பேட்டை, மேட்டுப்பாளையம் போன்ற பகுதிகளில் உள்ள அனைத்து வர்த்தக நிறுவனங்கள், உணவு விடுதிகள், டீ கடைகள், பெட்டிக்கடைகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் என அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. இதனால் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

Next Story