நெமிலி அருகே, அ.தி.மு.க. முன்னாள் மாவட்ட கவுன்சிலர்- மனைவிக்கு வெட்டு - ரூ.5 லட்சம் கொடுக்காததால் ஆத்திரம்
நெமிலி அருகே ரூ.5 லட்சம் கொடுக்காததால் அ.தி.மு.க. முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மற்றும் அவரது மனைவியை வெட்டியவரை போலீசார் கைது செய்தனர்.
நெமிலி,
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலியை அடுத்த பெருவளையம் கிராமத்தில் உள்ள பெரிய தெருவை சேர்ந்தவர் குமார் (வயது 44). அ.தி.மு.க. முன்னாள் மாவட்ட கவுன்சிலர். இவர் நேற்று முன்தினம் இரவு குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். நேற்று அதிகாலை அதே கிராமத்தை சேர்ந்த பழனி (32) என்பவர் குமார் வீட்டின் கதவை தட்டி உள்ளார்.
அப்போது குமார் வீட்டில் இருந்து வெளியே வந்துள்ளார். அவரிடம், பழனி எனக்கு அவசரமாக 5 லட்சம் ரூபாய் கடன் வேண்டும் என்று கேட்டு உள்ளார். அதற்கு குமார் இந்த நேரத்தில் வந்து பணம் கேட்கிறாயே?, என்னிடம் பணம் எதுவும் இல்லை என்று கூறி உள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டு உள்ளது.
இதில் ஆத்திரமடைந்த பழனி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குமாரின் காது, கழுத்து, முதுகு பகுதியில் வெட்டி உள்ளார். இதில் குமாரின் வலது காது துண்டானது. வலியால் குமார் அலறி கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அவருடைய மனைவி உமாதேவி வெளியே வந்து சண்டையை தடுக்க முயற்சி செய்தார். அப்போது பழனி, உமாதேவியையும் வெட்டி உள்ளார். இதில் அவருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது.
அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் சென்று பழனியை மடக்கி பிடித்தனர். காயமடைந்த குமார், உமாதேவியை மீட்டு சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த நெமலி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி, சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி பொதுமக்கள் பிடித்து வைத்திருந்த பழனியை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story