ஜோலார்பேட்டை, அரக்கோணம், நெமிலியில் முழு ஊரடங்கால் வெறிச்சோடிய சாலைகள்


ஜோலார்பேட்டை, அரக்கோணம், நெமிலியில் முழு ஊரடங்கால் வெறிச்சோடிய சாலைகள்
x
தினத்தந்தி 10 Aug 2020 4:00 AM IST (Updated: 10 Aug 2020 9:58 AM IST)
t-max-icont-min-icon

ஜோலார்பேட்டை, அரக்கோணம், நெமிலியில் முழு ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

ஜோலார்பேட்டை,

ஜோலார்பேட்டையில் நேற்று தளர்வற்ற முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. ஜோலார்பேட்டை பகுதியில் பல்வேறு சாலைகளில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிமுத்து தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் இம்ரான் மற்றும் போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். ஜங்ஷன் பஸ் நிறுத்தம் பகுதியில் வாகனச் சோதனை நடந்தது.

அப்போது அத்தியாவசிய தேவைக்காக வாகனங்களில் ஹெல்மெட், முகக் கவசம் அணியாமல் வீட்டை விட்டு வெளியில் வந்தவர்களை மடக்கி எச்சரிக்கை விடுத்தனர். முகக் கவசம் அணிந்த பிறகே வாகனத்தில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். முழு ஊரடங்கின்போது யாரும் தேவையின்றி வெளியில் வர வேண்டாம் என எச்சரித்தனர்.

இதனால் ஜோலார்பேட்டை பகுதியில் நேற்று காலை முதல் மாலை வரை அனைத்துச் சாலைகளிலும் வாகனங்கள் ஓடாததாலும், மக்கள் நடமாட்டம் இல்லாததாலும் வெறிச்சோடி காணப்பட்டது. மருந்துக்கடைகளை தவிர மற்ற அனைத்துக் கடைகளும் மூடப்பட்டு இருந்தன.

கொரோனா ஊரடங்கு காரணமாக நேற்று அரக்கோணம் நகரத்தில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. மேலும் காந்திரோடு, பழனிப்பேட்டை, சுவால்பேட்டை, பழைய, புதிய பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகள் மூடப்பட்டு இருந்தது.

ஊரடங்கை மீறிய 4 வாகனங்களை டவுன் போலீசார் பறிமுதல் செய்தனர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக நெமிலியில் உள்ள சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. சாலையில் உள்ள அனைத்து கடைகள் மூடப்பட்டு இருந்தது.

Next Story