ரஷியாவில் நதியில் குளித்தபோது திட்டக்குடியை சேர்ந்தவர் உள்பட 4 மருத்துவ மாணவர்கள் பலி
மருத்துவ படிப்புக்காக ரஷியா சென்றிருந்த திட்டக்குடியை சேர்ந்தவர் உள்பட தமிழகத்தைச் சேர்ந்த 4 மருத்துவ மாணவர்கள் அங்குள்ள நதியில் மூழ்கி பலியானார்கள்.
திட்டக்குடி,
சென்னை ஓட்டேரி குக்ஸ் சாலையை சேர்ந்தவர் மோகன். இவர், ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருடைய மூத்த மகன் ஸ்டீபன்(வயது 20). இவர், கடந்த 2018-ம் ஆண்டு முதல் ரஷியாவின் ஓல்கொகார்ட் பகுதியில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்து வந்தார்.
மருத்துவ பல்கலைக்கழக விடுதியில் தமிழக மாணவர்களுடன் தங்கி வந்தார். ஸ்டீபன் நேற்று முன்தினம் அங்குள்ள வோல்கா நதிக்கரைக்கு 10-க்கும் மேற்பட்ட தமிழக மாணவர்களுடன் சென்றார். பின்னர் நண்பர்கள் அனைவரும் நதியில் இறங்கி குளித்து விளையாடினர்.
அப்போது மாணவர் ஒருவர் நீரில் அடித்து செல்வதை பார்த்த ஸ்டீபன், அவரை காப்பாற்ற முயன்றார். அதில் ஸ்டீபனும் நீரில் அடித்துச்செல்ல, அதை கண்ட மேலும் 2 மாணவர்கள் அவர்களை காப்பாற்ற முயன்றனர்.
இதில் சென்னையை சேர்ந்த ஸ்டீபன், தாராபுரத்தை சேர்ந்த முகமது ஆஷிக், திட்டக்குடியை சேர்ந்த ராமு விக்னேஷ், சேலம் வீராணம் பகுதியை சேர்ந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தின் மகன் மனோஜ் ஆனந்த் ஆகிய 4 பேரும் நதியில் அடித்துச்செல்லப்பட்டனர். சில மணிநேரத்துக்கு பிறகு ஸ்டீபன் உள்பட 4 பேரின் உடல்களும் கரை ஒதுங்கியது. 4 பேரின் உடல்களையும் மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பலியான 4 பேரின் உடல்களை தமிழகத்துக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையில் ரஷியாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக தெரிகிறது.
ரஷியா நதியில் குளித்தபோது பலியான விக்னேஷ் விவரம் வருமாறு:-
கடலூர் மாவட்டம் திட்டக்குடி நடுத்தெருவை சேர்ந்தவர் ராமு(54). இவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி அமுதா. இவர்களுடைய மகன் விக்னேஷ்(23), மகள் தனலட்சுமி(21). இதில் தனலட்சுமி, கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் மருத்துவம் சார்ந்த படிப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் விக்னேஷ் ரஷியாவில் தங்கியிருந்து எம்.பி.பி.எஸ். இறுதியாண்டு படித்து வந்தார். இன்னும் 6 மாதங்களில் அவர் படிப்பை முடித்து விட்டு சொந்த ஊருக்கு வர இருந்தார். இந்த நிலையில் ரஷியாவில் உள்ள ஆற்றில் குளிக்க சென்ற போது நதியில் அடித்து செல்லப்பட்டு இறந்தார். இவர் இறந்த செய்தியை கேட்ட அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து டாக்டராக வேண்டும் என்ற கனவுடன் ரஷியா சென்ற திட்டக்குடி மாணவர் விக்னேஷ், சக மாணவனை காப்பாற்ற முயன்று நீரில் மூழ்கி பலியான சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story