கொடைக்கானல் அருகே, மின்சாரம் பாய்ந்து புதுமாப்பிள்ளை சாவு - குதிரையும் பலியான பரிதாபம்


கொடைக்கானல் அருகே, மின்சாரம் பாய்ந்து புதுமாப்பிள்ளை சாவு - குதிரையும் பலியான பரிதாபம்
x
தினத்தந்தி 10 Aug 2020 10:30 AM IST (Updated: 10 Aug 2020 10:27 AM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானல் அருகே மின்சாரம் பாய்ந்து புதுமாப்பிள்ளை பரிதாபமாக இறந்தார். மற்றொரு சம்பவத்தில் மின்சாரம் பாய்ந்து குதிரை பலியானது.

கொடைக்கானல்,

கொடைக்கானல் அருகே பூண்டி ஊராட்சிக்கு உட்பட்ட போளூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனிசாமி. அவருடைய மகன் லட்சுமணன் (வயது 25). இவருக்கு அடுத்த மாதம் (செப்டம்பர்) திருமணம் நடத்துவதற்கு நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. இந்தநிலையில் நேற்று காலை லட்சுமணன், தனது தோட்டத்துக்கு சென்றார்.

அப்போது தோட்டத்தை சுற்றி அமைக்கப்பட்டிருந்த சோலார் மின்வேலியில், உயர் அழுத்த மின்கம்பி அறுந்து கிடந்தது. இதனால் அந்த மின்வேலியில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது. இதனை அறியாத லட்சுமணன், சோலார் மின்வேலியை தொட்டார். இதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

இதேபோல் கொடைக்கானல் வில்பட்டி அருகே பேத்துப்பாறை கிராமத்தை சேர்ந்த கணேசன் என்பவர் 3 குதிரைகளை விவசாய பணிக்காக வளர்த்து வருகிறார். இந்தநிலையில் நேற்று அந்த குதிரைகளை தோட்டத்திற்கு அழைத்து சென்றார். அப்போது தோட்டத்திற்கு செல்லும் வழியில் அறுந்து கிடந்த மின்கம்பியை அவரது குதிரை ஒன்று மிதித்தது. இதில் மின்சாரம் பாய்ந்து அந்த குதிரை இறந்துபோனது.

இதற்கிடையே கொடைக்கானல் மற்றும் அதனை சுற்றியுள்ள மலைக்கிராமங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மழையுடன் பலத்த காற்றும் வீசுகிறது. இதனால் பல்வேறு இடங்களில் 100-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தன. மேலும் மின்கம்பிகளும் அறுந்து விழுந்தன. இதன்காரணமாக பல்வேறு கிராம பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இதனால் மின்தடை ஏற்படுவதை சரி செய்ய வேண்டும் என்றும், அறுந்து கிடக்கும் மின்கம்பிகளை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் அவை அகற்றப்படவில்லை. அதிகாரிகளின் அலட்சியத்தால் லட்சுமணனும், குதிரையும் இறந்ததாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். எனவே மின்சாரம் பாய்ந்து இறந்த லட்சுமணன் குடும்பத்துக்கும், குதிரையை இழந்த உரிமையாளர் கணேசனுக்கும் உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Next Story