முழு ஊரடங்கு: மாவட்டம் முழுவதும் கடைகள் அடைப்பு - பொதுமக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடின


முழு ஊரடங்கு: மாவட்டம் முழுவதும் கடைகள் அடைப்பு - பொதுமக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடின
x
தினத்தந்தி 10 Aug 2020 10:27 AM IST (Updated: 10 Aug 2020 10:27 AM IST)
t-max-icont-min-icon

தளர்வில்லா முழு ஊடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதையொட்டி நேற்று மாவட்டம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டன. பொதுமக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

கடலூர், 

கொரோனா பரவுவதை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் ஊரடங்கு உத்தரவு வருகிற 31-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கக்கூடாது என்பதற்காக சில தளர்வுகளும் அவ்வப்போது அறிவிக்கப்பட்டு வருகிறது. இருந்த போதிலும் கடந்த மாதத்தை போல் இந்த மாதமும் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வில்லா முழு ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

அதன்படி 2-வது ஞாயிற்றுக்கிழமையான நேற்றும் தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்த தளர்வில்லா முழு ஊரடங்கையொட்டி கடலூர் மாவட்டத்தில் பால், மருந்து கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.

கடலூரில் பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்து காணப்படும் லாரன்ஸ் ரோடு, இம்பீரியல் சாலை, பாரதி சாலை, நேதாஜி சாலை, கடலூர்- நெல்லிக்குப்பம் சாலை, செம்மண்டலம், திருப்பாதிரிப்புலியூர் 4 வீதிகள் போன்றவற்றில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் செயல்படும் தற்காலிக காய்கறி மார்க்கெட், கடலூர் கோ-ஆப்டெக்ஸ் எதிரே செயல்படும் தற்காலிக காய்கறி மார்க்கெட் ஆகியவை மூடப்பட்டன.

கடலூர் முதுநகரில் உள்ள தற்காலிக மார்க்கெட்டும் மூடப்பட்டு இருந்தது. வாகன போக்குவரத்தும் முற்றிலும் நிறுத்தப்பட்டதால் அனைத்து சாலைகளிலும் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி கிடந்தது. ஒரு சிலர் அத்தியாவசிய தேவைக்காக வெளியே வந்தனர். அவர்கள் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாரிடம் உரிய ஆவணங்களை காண்பித்து சென்றனர். தேவையின்றி சுற்றித்திரிந்தவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதேபோல் பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம், திட்டக்குடி, சேத்தியாத்தோப்பு, காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், புவனகிரி போன்ற பல்வேறு இடங்களிலும் முழு ஊரடங்கால் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. பொதுமக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

Next Story