நீலகிரியில் மழை குறைந்தது: மரங்கள் முறிந்து விழுந்ததில் 2 வீடுகள் சேதம்
நீலகிரியில் மழைப்பொழிவு குறைந்தது. மரங்கள் முறிந்து விழுந்ததில் 2 வீடுகள் சேதமடைந்தன.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 3-ந் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்தன. ஊட்டி-கூடலூர் சாலையில் பாறைகள், மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதற்கிடையே கடந்த 2 நாட்களாக மழை பொழிவு குறைவாக பதிவாகி வருகின்றது. இதனால் சேதமடைந்த மின்கம்பங்கள், மின் ஒயர்களை சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. வளைந்து சேதமான மின்கம்பங்கள் அப்புறப்படுத்தப்பட்டு புதிதாக மின் கம்பங்கள் நடப்படுகிறது.
ஊட்டியில் கடந்த 2 நாட்களாக அவ்வப்போது மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் நீண்ட நேரம் மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் அவதி அடைந்து உள்ளனர். இந்த நிலையில் நேற்று ஊட்டியில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதியம் வரை மழை பெய்யவில்லை. நேற்று முன்தினம் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் ஊட்டி-மஞ்சூர் சாலை காந்திபேட்டை பகுதியில் ராட்சத மரம் ஒன்று முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. அந்த மரம் வீடு மீது விழுந்ததால் வீட்டின் மேற்கூரை சேதமடைந்தது. வீட்டில் வசித்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இதுகுறித்து தகவலறிந்த ஊட்டி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று டார்ச் லைட் வெளிச்சத்தில் மின்வாள் மூலம் மரத்தை துண்டு துண்டாக வெட்டி அப்புறப்படுத்தினர். தொடர்ந்து ஊட்டி-மஞ்சூர் சாலை சந்திப்பு பகுதியில் பெரிய மரம் முறிந்து சாலையின் குறுக்கேயும், வீடு மீதும் விழுந்து கிடந்தது. பின்னர் தீயணைப்பு வீரர்கள், நெடுஞ்சாலைத்துறையினர் இணைந்து வெட்டி அப்புறப்படுத்தினர். மஞ்சூர் அருகே கரியமலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளி கூடுதல் கட்டிடத்தின் மீது போடப்பட்டிருந்த மேற்கூரை சேதமடைந்தது. கடந்த 5-ந் தேதி வீசிய சூறாவளி காற்றில் மேற்கூரை முழுவதும் சேதமடைந்து இருக்கிறது.
நீலகிரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் 24 மணி நேரத்தில் முடிவடைந்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-
ஊட்டி-29, நடுவட்டம்-34, கிளன்மார்கன்-34, அவலாஞ்சி-34, எமரால்டு-16, கிண்ணக்கொரை-21.5, அப்பர்பவானி-28, குன்னூர்-24.5, பர்லியார்-30, எடப்பள்ளி-60, கூடலூர்-30, தேவாலா-102, அப்பர் கூடலூர்-25, செருமுள்ளி-22, பந்தலூர்-40 உள்பட மொத்தம் 747.5 பதிவாகி உள்ளது. இதன் சராசரி 25.7 ஆகும். அதிகபட்சமாக தேவாலாவில் 10 சென்டி மீட்டர் மழை கொட்டி உள்ளது. மற்ற இடங்களில் மழை பொழிவு குறைந்திருக்கிறது.
குன்னூரில் நேற்று முன்தினம் சுமார் 3.15 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை விடிய விடிய பெய்தது. அவ்வப்போது சூறாவளி காற்றும் வீசியது. மழை மற்றும் காற்றினால் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் டபுள்ரோட்டில் நேற்று அதிகாலை சாலையின் மேற்புறம் இருந்த 2 ராட்சத மரங்கள் ஒன்றன் மீது ஒன்று சாலையில் விழுந்தன. இதனால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் வாகன போக்குவரத்து இல்லாமல் இருந்தது. இருப்பினும் 108 ஆம்புலன்ஸ் மற்றும் அத்தியாவசிய தேவைக் கான வாகனங்கள் செல்ல முடியவில்லை. இது குறித்து குன்னூர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மரங்கள் ஒன்றன் மீது ஒன்று விழுந்து இருந்ததால் தீயணைப்பு துறை வாகனங்களின் மீது ஏறி கிளைகள் மற்றும் மரங்களை வெட்டி அகற்றினர்.
Related Tags :
Next Story