ரஷியாவில் ஆற்றில் மூழ்கி தாராபுரம் மருத்துவ மாணவர் பலி


ரஷியாவில் ஆற்றில் மூழ்கி தாராபுரம் மருத்துவ மாணவர் பலி
x
தினத்தந்தி 10 Aug 2020 11:30 AM IST (Updated: 10 Aug 2020 11:17 AM IST)
t-max-icont-min-icon

ரஷியாவில் மருத்துவக்கல்லூரியில் படித்து வந்த தாராபுரத்தை சேர்ந்த மாணவர் தனது நண்பர்களுடன் ரஷியாவில் ஆற்றில் குளித்த போது வெள்ளத்தில் சிக்கி தண்ணீரில் மூழ்கி பலியானார்.

தாராபுரம், 

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள சொக்கநாதபாளையத்தை சேர்ந்தவர் முகமதுரபிக். யுனானி மருத்துவரான இவர் தாராபுரத்தில் மருத்துவமனை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் முகம்மது ஆசிக் (வயது 22). இவர் ரஷியாவில் உள்ள ஓல்கொகார்ட் பகுதியில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தில் எம்.பி.பி.எஸ். 5-ம் ஆண்டு படித்து வந்தார்.

இவர் இன்னும் 6 மாதங்களில் மருத்துவக்கல்வியை முடித்து விட்டு சொந்த ஊரான தாராபுரம் திரும்ப இருந்தார். இந்த நிலையில் தனது நண்பர்கள் 3 பேருடன் நேற்று முன்தினம் இரவு அங்குள்ள வோல்கா ஆற்றில் குளிக்க சென்றனர்.

அப்போது வோல்கா ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக முகம்மது ஆசிக் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டனர். இதில் அவர்கள் நீரில் மூழ்கி இறந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்த தகவல் தாராபுரத்தில் உள்ள முகம்மது ஆசிக்கின் பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. மாணவர் முகம்மது ஆசிக்கின் உடலை சொந்த ஊரான தாராபுரத்திற்கு கொண்டு வர பெற்றோர் மற்றும் அ.தி.மு.க தொழில்நுட்ப பிரிவு டி.பி.எம்.ஆத்திக் ஆகியோர் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் ஆகியோரிடம் உதவி கேட்டுள்ளனர். இந்த சம்பவம் தாராபுரம் சொக்கநாதபாளையம் கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Next Story