குமரியில் நீடிக்கும் மழை: பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு


குமரியில் நீடிக்கும் மழை: பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 10 Aug 2020 11:59 AM IST (Updated: 10 Aug 2020 11:59 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

நாகர்கோவில், 

இருபருவ மழைகளை கொண்ட குமரி மாவட்டத்தில் தற்போது தென்மேற்கு பருவ மழை பெய்து வருகிறது. தினமும் காலை, மாலை மற்றும் மதியம் என அனைத்து பொழுதுகளிலும் மழை பெய்து வருகிறது. மேலும் அவ்வப்போது கருமேகங்கள் மறைந்து சூரிய வெயிலும் வந்து செல்கிறது. இவ்வாறு குமரி மாவட்டத்தில் சீதோஷ்ண நிலை மாறி மாறி நிலவுகிறது.

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் பல இடங்களில் மரக்கிளைகள் முறிவு, கடைகள் மற்றும் வீடுகளில் மேற்கூரை சேதம் உள்ளிட்டவை நிகழ்ந்தன. நேற்று முன்தினம் காலையில் இருந்து இரவு வரை மழை பெய்யவில்லை. ஆனால் நள்ளிரவில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. சாரலாக பெய்த இந்த மழை சிறிது நேரம் வரை விடாமல் பெய்தது. அதன் பிறகு நேற்று காலையிலும் வழக்கம் போல மழை பெய்ய தொடங்கியது. பலத்த மழையாகவும் இல்லாமல், சாரலாகவும் இல்லாமல் மிதமாக பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. குமரியில் நீடிக்கும் மழையால் மக்கள் இதமான சூழலை அனுபவிக்கிறார்கள்.

நீர்ப்பிடிப்பு

குமரி மாவட்டத்தில் நேற்று தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் இல்லை. வழக்கமான நாட்களில் இதுபோல மழை பெய்து கொண்டு இருந்தால் மக்கள் வேலைக்கு செல்ல மிகவும் சிரமப்படுவார்கள். ஆனால் முழு ஊரடங்கு காரணமாக மக்கள் வீடுகளில் இருந்துகொண்டு மழையை கண்டு ரசித்தனர்.

மலையோர பகுதிகள் மற்றும் அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை கொட்டியது. இந்த மழை அதிகபட்சமாக சிற்றார்- 2 அணை பகுதியில் 52 மில்லி மீட்டர் பதிவாகி இருந்தது.

மழை அளவு

இதேபோல குமரி மாவட்டம் முழுவதும் நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

பூதப்பாண்டி-7.4, களியல்-10.6, கன்னிமார்-11.9, கொட்டாரம்-7, குழித்துறை-25.4, மயிலாடி-7.2, நாகர்கோவில்-9, புத்தன்அணை-23.4, சுருளோடு-26.2, தக்கலை-39, குளச்சல்-8.4, இரணியல்-10.2, பாலமோர்-42.2, ஆரல்வாய்மொழி-2.8, கோழிப்போர்விளை-30, அடையாமடை-12, குருந்தன்கோடு-11, முள்ளங்கினாவிளை-38 மற்றும் ஆனைகிடங்கு-16.2 என்ற அளவில் மழை பெய்திருந்தது.

இதுபோன்று அணை பகுதிகளில் பேச்சிப்பாறை-29.4, பெருஞ்சாணி-24.8, சிற்றார் 1-38.6, மாம்பழத்துறையாறு-14, பொய்கை-2.8, முக்கடல்-8.6 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது.

மழை காரணமாக அணைகளுக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 1083 கனஅடி தண்ணீர் வந்தது. இதே போல பெருஞ்சாணி அணைக்கு 1090 கனஅடியும், சிற்றார்-1 அணைக்கு 284 கனஅடியும், சிற்றார்-2 அணைக்கு 264 கனஅடியும், முக்கடல் அணைக்கு 7 கனஅடியும் தண்ணீர் வந்தது.

அதே சமயம் பேச்சிப்பாறை அணையில் இருந்து 422 கனஅடியும், சிற்றார்-1 அணையில் இருந்து 100 கனஅடியும் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் குளங்களுக்கும் தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. கோதையாறு, பழையாறு, அனந்தனார் உள்ளிட்ட கால்வாய்களில் தண்ணீர் ஓடுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story