காசிமேட்டில் இருந்து கடலில் மீன்பிடிக்க சென்ற 10 மீனவர்கள் மாயம்: ஹெலிகாப்டர் மூலம் தேடுகிறார்கள்
காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற 10 மீனவர்கள் மாயமானார்கள். அவர்களை கடலோர காவல் படையினர் கப்பல் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் தேடிவருகிறார்கள்.
திருவொற்றியூர்,
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த ஜூலை மாதம் 22-ந் தேதி காசிமேடு நாகூரார் தோட்டம் பகுதியைச் சேர்ந்த பாலாஜி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் திருவொற்றியூர் குப்பம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் லட்சுமணன், சிவகுமார், பாபு, பார்த்திபன், திருவொற்றியூர் குப்பத்தை சேர்ந்த முருகன், கண்ணன், தேசப்பன், ரகு, லட்சுமிபுரம் குப்பத்தை சேர்ந்த தேசப்பன் உள்பட 10 மீனவர்கள், 10 நாட்களுக்கு தேவையான உணவு பொருட்களை எடுத்துக்கொண்டு கடலுக்குள் 70 நாட்டிக்கல் தூரத்தில் மீன்பிடிக்கச் சென்றனர்.
வழக்கமாக 7 நாட்களில் கரைக்கு திரும்ப வேண்டிய மீனவர்கள், 20 நாட்கள் ஆகியும் இதுவரை கரை திரும்பவில்லை. மீன்பிடிக்கச்சென்ற மீனவர்களின் உறவினர்கள் போன் செய்தபோதும் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. மீனவர்கள் அனைவரும் மாயமாகிவிட்டதாக தெரிகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்களின் குடும்பத்தினர், மாயமான மீனவர்களை கண்டுபிடித்து தருமாறு சென்னை காசிமேடு மீன்துறை உதவி இயக்குனர் வேலனிடம் புகார் அளித்தனர்.
இதையடுத்து அவரது நேரடி மேற்பார்வையில் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்று மாயமான சென்னை மீனவர்களை கண்டுபிடிக்க ஆந்திரா, புதுச்சேரி, ஒடிசா, அந்தமான் பகுதிகளில் கடலோர காவல்படையினர் கப்பல் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் தேடி வருகின்றனர்.
இதற்கிடையே மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கூறியிருப்பதாவது:-
காணாமல் போன படகுடன் சேர்ந்து மீன்பிடிக்க சென்ற படகில் உள்ள மீனவர்களை, மீன் துறையினர் செயற்கைக் கோள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு காணாமல் போன படகின் விவரம் தெரிவிக்கப்பட்டு, அவர்களையும் தேடுதல் பணி மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும் சென்னை மீன்பிடித் துறைமுகத்தை சேர்ந்த உள்ளூர் விசைப்படகுகளை கொண்டும் காணமால் போன மீனவர்களை மீட்பதற்கு மீன்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
காணாமல் போன மீனவர்கள் மற்றும் படகினை கண்டறிந்து அவர்களை பாதுகாப்பாக மீட்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story