ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்து இளம்பெண்ணை ஏமாற்றி கர்ப்பமாக்கிய வாலிபர்
ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்து இளம்பெண்ணை, திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தைகள் கூறி கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பூந்தமல்லி,
சென்னை மதுரவாயலை சேர்ந்த 24 வயது இளம்பெண்ணுக்கு நேற்று முன்தினம் திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. உடனடியாக அவரை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், இளம்பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டு இருப்பதாகவும், சிறிதுநேரத்தில் குழந்தை பிறந்துவிடும் எனவும் கூறி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
இதைக்கேட்டு அந்த பெண்ணின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கிடையில் அந்த பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் நடத்திய விசாரணையில் அந்த பெண்ணுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று தெரிந்தது. இதுபற்றி ஆஸ்பத்திரியில் இருந்து மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் சம்பவ இடத்துக்கு சென்று அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டார். அதில், புழலைச் சேர்ந்த லோகேஷ்(வயது 24) என்ற வாலிபர், தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி கர்ப்பம் ஆக்கிவிட்டதாக தெரிவித்தார்.
இதையடுத்து மதுரவாயல் போலீசார் லோகேசை கைது செய்து விசாரித்தனர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
புழலைச் சேர்ந்த லோகேஷ், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்கனவே திருமணமாகி மனைவி உள்ளார். மதுரவாயல் வழியாக சென்றபோது அவரது மோட்டார்சைக்கிள் பஞ்சர் ஆனதால் பாதிக்கப்பட்ட இந்த பெண்ணின் வீட்டின் அருகே நின்று தண்ணீர் கேட்டுள்ளார்.
அந்த பெண், அவருக்கு தண்ணீர் கொடுத்தார். அந்த பெண் அழகாக இருந்ததால் தன்னிடம் பேசுமாறு கூறி லோகேஷ் தனது செல்போன் நம்பரை ஒரு துண்டு சீட்டில் எழுதி கொடுத்தார். ஆனால் அந்த பெண் அவரிடம் பேசவில்லை என தெரிகிறது.
ஆனாலும் லோகேஷ் விடாமல் மீண்டும் ஒருவாரம் கழித்து அந்த பெண்ணை சந்தித்து, தனக்கு ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்து, இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பழகினார்.
அதை நம்பிய அந்த பெண்ணும் அவருடன் பழகினார். லோகேஷ் அடிக்கடி அந்த பெண்ணை வெளியே அழைத்துச்சென்று உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகு அந்த பெண்ணிடம் பேசுவதை தவிர்த்தார். இதற்கிடையில் அந்த இளம்பெண் கர்ப்பமானார்.
இதுபற்றி லோகேசிடம் கூறி, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினார். ஆனால் திருமணத்துக்கு மறுத்த லோகேஷ், கர்ப்பத்தை கலைத்து விடுமாறு கூறிவிட்டார். இதுபற்றி தனது பெற்றோரிடம் தெரிவிக்காமல் வயிற்றில் நீர்கட்டி இருப்பதாக கூறி சிகிச்சை பெற்று வந்தார்.
தற்போது குழந்தை பிறந்த பிறகுதான் அவரது பெற்றோருக்கு தங்கள் மகள் கர்ப்பமாகி இருப்பது தெரிந்தது. இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார், கைதான லோகேசை சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story