கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு: கிராமங்கள், விளைநிலங்களில் புகுந்த வெள்ளம் வடிகிறது


கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு: கிராமங்கள், விளைநிலங்களில் புகுந்த வெள்ளம் வடிகிறது
x
தினத்தந்தி 11 Aug 2020 4:15 AM IST (Updated: 11 Aug 2020 2:51 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. வினாடிக்கு 37 ஆயிரம் கனஅடி தண்ணீர் செல்கிறது. இதனால் கிராமங்கள், விளைநிலங்களில் புகுந்த வெள்ளம் நீர் வடிகிறது.

மைசூரு, 

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. கடந்த ஜூன் மாதத்தில் தொடங்கிய இந்த பருவமழை, இந்த மாத தொடக்கத்தில் தான் தீவிரமடைய தொடங்கி உள்ளது. மாநிலத்தில் பெங்களூரு, மைசூரு, குடகு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது. இதன்காரணமாக மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளியில் உள்ள கபினி அணைக்கும், மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடியில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணைக்கும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தது.

இதனால் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பே கபினி அணை நிரம்பி விட்டது. இதனால் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே திறந்து விடப்பட்டது. மேலும் கே.ஆர்.எஸ். அணையும் நிரம்பும் நிலையில் உள்ளது. இந்த இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 1½ லட்சம் கனஅடி வரை தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இதன்காரணமாக கபிலா, காவிரி ஆறுகளில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. நஞ்சன்கூடு, எச்.டி.கோட்டை, டி.நரசிப்புரா ஆகிய தாலுகாக்களில் கபிலா கரையோரத்தில் உள்ள கிராமங்கள் மற்றும் விளைநிலங்களில் வெள்ளம் புகுந்தது. வெள்ளம் புகுந்ததால், பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமாகின. அந்த தாலுகாக்களில் உள்ள கிராமங்கள் வெள்ளத்தில் மிதந்தன. இதேபோல, கே.ஆர்.எஸ். அணையில் இருந்தும் அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், ரங்கனதிட்டு பறவைகள் சரணாலயத்தில் தண்ணீர் புகுந்தன.

கபிலா, காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஏராளமான பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கின. மேலும், பெரிய பாலங்களை தொட்டப்படி தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. இதன்காரணமாக, பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. மேலும், பாலத்துக்கு செல்லும் வழி தடுப்பு சுவர் கட்டப்பட்டது.

இந்த நிலையில், குடகு மற்றும் கேரள மாநிலம் வயநாட்டில் மழை குறைந்துள்ளது. இதன்காரணமாக கபினி, கே.ஆர்.எஸ். அணைகளுக்கு வரும் தண்ணீரின் அளவும் குறைந்துள்ளது. இதனால், இரு அணைகளில் இருந்தும் திறக்கப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது. கடல் மட்டத்தில் 692.16 மீட்டர் கொள்ளளவு கொண்ட கபினி அணையில் நேற்று காலை நிலவரப்படி 695.44 மீட்டர் தண்ணீர் உள்ளது. நேற்று காலை 10 மணி அளவில் அணைக்கு வினாடிக்கு 41 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து மாலை 6 மணி அளவில் வினாடிக்கு 17,191 கனஅடியாக குறைந்தது.

இதேபோல, 124.80 அடி உயரம் கொண்ட கே.ஆர்.எஸ். அணையில் நேற்று காலை நிலவரப்படி 120.80 அடி தண்ணீர் இருந்தது. காலை 6 மணிக்கு வினாடிக்கு 77 ஆயிரமாக இருந்த நீர்வரத்து மதியம் 12 மணி அளவில் வினாடிக்கு 71 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. பின்னர் மாலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 58,083 கனஅடியாக நீர்வரத்து குறைந்தது.

இந்த இரு அணைகளுக்கும் நீர்வரத்து குறைந்துள்ளதால், திறக்கப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 6 மணி நிலவரப்படி கபினி அணையில் இருந்து வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடி தண்ணீரும், கே.ஆர்.எஸ். அணையில் இருந்து வினாடிக்கு 30,657 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்பட்டது. இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 37,657 கனஅடி தண்ணீர், காவிரி ஆற்றில் தமிழகம் நோக்கி செல்கிறது. கடந்த 2 நாட்களுக்கு மேலாக வினாடிக்கு 1 லட்சம் கனஅடிக்கும் மேலாக தண்ணீர் தமிழகம் நோக்கி சென்று கொண்டிருந்தது. தற்போது, அணைகளுக்கு வரும் நீர்வரத்து குறைந்ததால், வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டது.

இதனால் கபிலா, காவிரி ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளது. இதன்காரணமாக கிராமங்கள், விளைநிலங்களில் புகுந்த வெள்ளம் வடிந்து வருகிறது. இந்த வெள்ளத்தால் யாருக்கும் பாதிப்பு இல்லை என்றாலும், விளைநிலங்கள், வீடுகள் நாசமாகி உள்ளன. மேலும் வெள்ள அபாயம் நீக்கப்பட்டதால், பாலத்துக்கு செல்லும் பாதையை மூடி அமைக்கப்பட்ட தடுப்பு சுவரும் அகற்றப்பட்டு போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது.


Next Story