கரூரில், தாய்-2 குழந்தைகள் மர்ம சாவு - செல்போன் வெடித்து தீப்பற்றியதில் இறந்தார்களா? போலீசார் விசாரணை


கரூரில், தாய்-2 குழந்தைகள் மர்ம சாவு - செல்போன் வெடித்து தீப்பற்றியதில் இறந்தார்களா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 11 Aug 2020 4:00 AM IST (Updated: 11 Aug 2020 5:14 AM IST)
t-max-icont-min-icon

கரூரில் தாய்-2 ஆண் குழந்தைகள் மர்மமான முறையில் இறந்தனர். செல்போன் வெடித்து தீப்பற்றியதில் அவர்கள் இறந்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர்,

கரூர் அருகே உள்ள கல்லுமடையை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவருடைய மனைவி முத்துலட்சுமி(வயது 29). இவர்களுக்கு ரக்‌ஷித்(3), தக்‌ஷித்(2) என 2 ஆண் குழந்தைகள் இருந்தனர். தாந்தோன்றிமலை அருகே உள்ள ராயனூர் பகுதிக்கு உட்பட்ட ராம்நகரில் முத்துலட்சுமியின் பெற்றோருக்கு சொந்தமான வீடு உள்ளது.

அந்த வீட்டில் பாலகிருஷ்ணன் ஓட்டல் வைத்து நடத்தி வந்தார். ஓட்டல் தொடர்பான செலவுக்காக பாலகிருஷ்ணன் பலரிடம் கடன் வாங்கியதாக தெரிகிறது. கடன் சுமை அதிகரித்த நிலையில், கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பு பாலகிருஷ்ணன் தலைமறைவாகி விட்டார்.

இதையடுத்து முத்துலட்சுமி, தனது பெற்றோருடன் சேர்ந்து அந்த ஓட்டலை நடத்தி வந்தார். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 4 மாதங்களாக அந்த ஓட்டல் திறக்கப்படவில்லை. இதனால் முத்துலட்சுமி கரூரில் உள்ள ஒரு மளிகை கடைக்கு வேலைக்கு சென்று வந்தார். முத்துலட்சுமியின் தந்தையும் வேலைக்கு சென்று வந்தார். குழந்தைகளை முத்துலட்சுமியின் தாய் கவனித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் முத்துலட்சுமியின் தாயும், தந்தையும் அவர்களுடைய சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றனர். இதனால் வீட்டில் முத்துலட்சுமி தனது குழந்தைகளுடன் இருந்தார்.

நேற்று முன்தினம் இரவு முத்துலட்சுமி குழந்தைகளுடன் சாப்பிட்டுவிட்டு வீட்டில் படுத்து தூங்கினார். நேற்று அதிகாலை 4 மணியளவில் அவருடைய வீட்டில் இருந்து குபுகுபுவென புகை வெளியேறியது. அந்த வழியாக சென்றவர்கள் இதைக்கண்டு தாந்தோன்றிமலை போலீசாருக்கும், கரூர் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் அங்கு விரைந்து வந்து பார்த்தனர். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. இதனால் கதவை உடைத்து உள்ளே சென்ற தீயணைப்பு வீரர்கள், புகைமூட்டமாக இருந்த பகுதியில் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். பின்னர் பார்த்தபோது, அங்கிருந்த சோபாவில் முத்துலட்சுமி உடல் முழுவதும் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். சோபாவும் எரிந்த நிலையில் இருந்தது. இதையடுத்து மற்றொரு அறைக்கு சென்று பார்த்தபோது, குழந்தைகள் 2 பேரும் இறந்த நிலையில் பிணமாக கிடந்தனர்.

தாந்தோன்றிமலை போலீசார், முத்துலட்சுமி மற்றும் குழந்தைகளின் உடல்களை கைப்பற்றி கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து முத்துலட்சுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்த போலீசார், சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். வீட்டில் உள்ள சுவிட்ச் போர்டு வெடித்து சிதறியது போன்று இருந்தது. இதனால் மின்கசிவு காரணமாகவோ அல்லது முத்துலட்சுமி இரவில் செல்போனை சார்ஜ் போட்டுவிட்டு அணைக்காமல் தூங்கியிருந்ததால், செல்போன் சூடான நிலையில் வெடித்து சிதறி சோபாவில் தீப்பற்றி, முத்துலட்சுமி உடல் கருகி இறந்திருக்கலாம். மேலும் புகை மூட்டம் காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு குழந்தைகளும் இறந்திருக்கலாம், என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அதிக கடன் சுமை காரணமாக முத்துலட்சுமி குழந்தைகளை கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டாரா? என்ற சந்தேகமும் போலீசாருக்கு உள்ளது.

இதனால் இந்த சம்பவம் குறித்து தாந்தோன்றிமலை போலீசார், சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து, முத்துலட்சுமி மற்றும் குழந்தைகள் சாவுக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கரூரில் தாய், குழந்தைகள் மர்மமான முறையில் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story