ஓ.பி.சி. மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தக்கோரி முகமூடி அணிந்து வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களால் பரபரப்பு
ஓ.பி.சி. மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தக்கோரி கலெக்டர் அலுவலத்துக்கு முகமூடி அணிந்து வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக, கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் ஏராளமானவர்கள் திங்கட்கிழமை தோறும் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்து செல்கின்றனர். நேற்றும் ஏராளமானவர்கள் மனு கொடுக்க வந்தனர்.
தூத்துக்குடியில் அனைத்து ஓ.பி.சி மற்றும் டி.என்.டி. சமூகத்தை சேர்ந்தவர்கள் சீர்மரபினர் நலச்சங்க மாநில துணை செயலாளர் கார்த்திகைராஜன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் அங்கு முகமூடி அணிந்தபடி ஆர்ப்பாட்டம் நடத்தியதால்பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் அவர்கள் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதாவிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
2021-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பில் இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு (ஓ.பி.சி.) சேர்த்து கணக்கெடுப்பு நடத்த வேண்டும். ஓ.பி.சி. மக்களுக்கு வழங்கி உள்ள 27 சதவீத இடஒதுக்கீடு12 சதவீதம் கூட பூர்த்தியாகாத நிலையில், ஓ.பி.சி. கிரிமிலேயர் என்று வருமான அடிப்படையில் ஓ.பி.சி.யினரின் உரிமைகளை பறிக்கும் சர்மா குழு பரிந்துரையை ஏற்கக்கூடாது. கிரிமிலேயரை முழுமையாக நீக்க வேண்டும். எல்லா கல்வி நிறுவனத்திலும் ஓ.பி.சி.க்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும். 2015-ம் ஆண்டுபிற்படுத்தப்பட்டோர் ஆணைய பரிந்துரைப்படி ஓ.பி.சி. உள்ஒதுக்கீட்டை செயல்படுத்த வேண்டும். பெண்களுக்கு எல்லா நிறுவனங்களிலும் 50 சதவீதம் கிடைமட்ட ஒதுக்கீடு வழங்க வேண்டும், மத்திய, மாநில அரசின் அனைத்து வளர்ச்சி திட்டங்களிலும் ஓ.பி.சி.க்கு தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும். அரசியல் அமைப்பு சட்டத்தை திருத்தி இடஒதுக்கீட்டை அடிப்படை உரிமையாக்க வேண்டும். இந்த கோரிக்கையை வருகிற 15-ந்தேதி நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் தீர்மானமாகநிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி மண்டல நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை செயலாளர் வேல்ராஜ் தலைமையில் கட்சியினர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், ‘இயற்கைக்கும், அனைத்து உயிரினங்களுக்கும், மனித குலத்துக்கும் எதிரானது சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு-2020, மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் தேசிய மீன்வள சட்ட மசோதா, ஏழை பள்ளி மாணவர்களின் படிப்பை பாதிக்கும் புதிய கல்வி கொள்கை போன்ற அனைத்து மக்கள் விரோத சட்ட வரைவுகளையும் உடனடியாக கைவிடுவதோடு, திரும்ப பெற வேண்டும். தமிழக மக்களின் ஒட்டுமொத்த உணர்வையும், எதிர்ப்பையும் பிரதிபலிக்கும் விதமாக மத்தியஅரசுக்கு தமிழக அரசு கடுமையான ஆட்சேபனையும், அழுத்தத்தையும் தெரிவிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டு உள்ளது.
தமிழக உழவர் முன்னணி மாவட்ட அமைப்பாளர் தமிழ்மணி உள்ளிட்டவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், ‘குரும்பூர் அருகே உள்ள கடம்பாகுளம் மீன்பிடிக்கும் தொழிலாளர்கள் குளத்தில் மீன்பிடிக்க இருந்த நிலையில், மீன்வளத்துறை உதவி இயக்குனர் தலைமையிலான அதிகாரிகள் மீனவர்களின் 200-க்கும் மேற்பட்ட வலைகளை எடுத்து சென்று விட்டனர். அந்த மீனவர்களுக்கு இன்னும் 40 நாட்கள் வலை உரிமம் உள்ளது. ஆகையால் மீன்வளத்துறை அதிகாரிகள் எடுத்து சென்ற வலைகளை மீண்டும் கொடுத்து குளத்தில் தொடர்ந்து மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும்’ என்று கூறி உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட உப்பு தொழிலாளர் சங்கத்தினர் தலைவர் பொன்ராஜ் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில், ‘தூத்துக்குடி உப்பள தொழிலாளர்களுக்கு தமிழக அரசின் குறைந்தபட்ச சட்டத்தின்படி சம்பளம் வழங்கிட, பேச்சுவார்த்தை என்ற பெயரில் காலம் கடத்தி வருகின்றனர். உடனடியாக சம்பள சட்டத்தை அமல்படுத்த வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 17-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்’ என்று கூறி உள்ளனர். கலெக்டர் அலுவலகத்துக்கு ஏராளமானோர் மனு கொடுக்க வந்ததையொட்டி நேற்று அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story