சேலம், கிருஷ்ணகிரியில் கொரோனாவுக்கு பெண்கள் உள்பட 9 பேர் பலி


சேலம், கிருஷ்ணகிரியில் கொரோனாவுக்கு பெண்கள் உள்பட 9 பேர் பலி
x
தினத்தந்தி 11 Aug 2020 3:30 AM IST (Updated: 11 Aug 2020 6:45 AM IST)
t-max-icont-min-icon

சேலம், கிருஷ்ணகிரியில் கொரோனாவுக்கு பெண்கள் உள்பட 9 பேர் பலியானார்கள்.

சேலம்,

சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனாவுக்கு தினமும் உயிரிழப்புக்களும் ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியை சேர்ந்த 56 வயதுடைய ஒருவர் உடல்நலம் குறைவால் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார்.

சேலம் குகை பகுதியை சேர்ந்த 65 வயதுடைய மூதாட்டி ஒருவர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இரவில் அவர் இறந்தார். ஆத்தூர் பகுதியை சேர்ந்த 60 வயதுடைய ஒருவர் நேற்று முன்தினம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிசைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

நாமக்கல் மாவட்டம் பெரிய மணலி பகுதியை சேர்ந்த 48 வயதுடைய பெண் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று இறந்தார். இதேபோல் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 45 வயதுடைய ஒருவர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். மேலும் சேலத்தில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து சேலம் அரசு ஆஸ்பத்திரி டீன் பாலாஜிநாதன் கூறும்போது, சேலத்தில் கொரோனாவுக்கு இதுவரை 74 பேர் இறந்துள்ளனர். இதில் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 58 பேர் ஆவார்கள். பலர் மிகவும் உடல்நலம் மோசமான நிலையில் மேல் சிகிச்சைக்காக இங்கு சேர்க்கப்படுகின்றனர். எனவே உடல்நலம் பாதிக்கப்பட்டால் உடனடியாக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டும் என்றார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தநிலையில் ஓசூரை சேர்ந்த 42 வயது ஆண் மூச்சுத்திணறல் காரணமாக ஓசூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த போது கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று அவர் பரிதாபமாக இறந்தார்.

இதேபோல் கிருஷ்ணகிரியை சேர்ந்த 67 வயது பெண் மூச்சுத்திணறல் காரணமாக கடந்த மாதம் 21-ந்தேதி கோவையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. இந்தநிலையில் அவரை கிருஷ்ணகிரிக்கு அழைத்து வந்து சிகிச்சை அளிக்க உறவினர்கள் முடிவு செய்து ஆம்புலன்சில் அழைத்து வந்தனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்தார். இதன் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.

Next Story