கர்நாடக வனப்பகுதியில் இருந்து புலி, கரடி வெளியேறி தமிழக வனப்பகுதிக்குள் வந்ததா? கண்காணிப்பு கேமரா பதிவால் பரபரப்பு
கர்நாடக வனப்பகுதியில் இருந்து புலி, கரடி வெளியேறி வருவது போன்ற கண்காணிப்பு கேமரா பதிவு வெளியாகி உள்ள நிலையில் தமிழக வனப்பகுதிக்குள் வந்ததாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தேன்கனிக்கோட்டை,
கர்நாடக மாநிலம் ஆனேக்கல் தாலுகாவில் உள்ளது பன்னார்கட்டா தேசிய வனவிலங்கு பூங்கா. இந்த வனவிலங்கு பூங்காவில் காட்டுயானைகள், புலிகள், சிறுத்தைகள், மான்கள், கரடிகள், காண்டாமிருகம் உள்ளிட்ட பலவிதமான விலங்குகளும், பறவைகளும் வளர்க்கப்பட்டு வருகிறது.
இந்த வனவிலங்கு பூங்கா சுற்றுலா தலமாக உள்ளதால் இங்கு அதிக அளவில் பொதுமக்கள் சென்று விலங்குகளையும், பறவைகளையும் பார்த்து ரசித்து வருவார்கள். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தற்போது இந்த பூங்கா செயல்படாமல் பூட்டப்பட்டு கிடக்கிறது. இந்த பூங்காவில் உள்ள விலங்கினங்கள் மற்றும் பறவைகள் மட்டும் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் பன்னார்கட்டா தேசிய வனவிலங்கு பூங்காவிற்கு அருகேயுள்ள ராகிஹள்ளி வனப்பகுதி அருகே வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளில் ஒரு புலியும், ஒரு கரடியும் அடுத்தடுத்து நடந்து செல்வது பதிவாகியுள்ளது. இந்த காட்சிகள் குறித்து அறிந்த வனத்துறையினர் இந்த 2 விலங்குகளும் அருகில் உள்ள பன்னார்கட்டா பூங்காவில் இருந்து வெளியேறி தமிழக வனப்பகுதிக்கு வந்ததா? அல்லது வேறு வனப்பகுதியில் இருந்து தமிழக வனப்பகுதிக்கு வந்ததா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது சம்பந்தமாக 50-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். புலி, கரடி உலாவுவதால் அருகே உள்ள கிராமப்பகுதிகளில் வாழும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல கர்நாடக மாநில வனப்பகுதியை அடுத்து தமிழக வனப்பகுதிகள் உள்ளதால் அதனை ஒட்டிய கிராமப்பகுதிகளிலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story