சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் கைதான சப்-இன்ஸ்பெக்டர் கொரோனாவுக்கு பலி - ஆஸ்பத்திரிக்கு சென்று மாஜிஸ்திரேட்டு விசாரணை
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் கைதான சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பால்துரை கொரோனா தொற்றால் உயிர் இழந்தார். அவர் சிகிச்சை பெற்று வந்த மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு மாஜிஸ்திரேட்டு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
மதுரை,
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 10 போலீசார் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
அவர்களில் ஒருவரான சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பால்துரைக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் கடந்த மாதம் 24-ந் தேதி மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பால்துரையின் மனைவி மங்கையர்திலகம் கடந்த 8-ந் தேதி, மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து, துணை கமிஷனரை சந்தித்து மனு ஒன்றை கொடுத்தார்.
அதில், “மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் எனது கணவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார். அவரது உயிரை காப்பாற்ற எனது சொந்த செலவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அனுமதிக்க வேண்டும்” என்று கூறி இருந்தார். இதுதொடர்பாக அவர் பேட்டியும் அளித்தார்.
இந்த நிலையில் பால்துரையின் உடல்நிலை நேற்று முன்தினம் திடீரென்று மோசமானது. நள்ளிரவில் அவர் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து மதுரை அரசு ஆஸ்பத்திரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணை கைதியான பால்துரையின் உடலை, பிரேத பரிசோதனை அறைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும் அவர் கொரோனா தொற்றால் இறந்ததால் பாதுகாப்பு விதிகளையும் பின்பற்றினர்.
பால்துரைக்கு நிஷா என்ற மகளும், பிரபன் என்ற மகனும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகிவிட்டது. மகன் என்ஜினீயர்.
பால்துரை மரணம் அடைந்ததை தொடர்ந்து, மதுரை மாவட்ட 2-வது மாஜிஸ்திரேட்டு பத்மநாபன் நேற்று மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். அப்போது அவரது முன்பு பால்துரையின் மனைவி மங்கையர்திலகம் மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் ஆகியோர் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
அதன்பின்னர் பால்துரையின் உடல் கொரோனா நோயாளிகளுக்கு செய்யப்படும் உடற்கூராய்வு முறைப்படி, 2 டாக்டர்கள் கொண்ட குழுவினரால் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இது வீடியோ பதிவும் செய்யப்பட்டது.
பின்னர் உடல், மங்கையர்திலகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. கணவரின் உடலை தனது சொந்த ஊருக்கு கொண்டு செல்ல அவர் அனுமதி கேட்டார். ஆனால் கொரோனா நோயாளிகளின் உடலை வெளியூருக்கு கொண்டு செல்ல அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
அதன்பின்னர் உறவினர்களுடன் பால்துரையின் உடலை, சுகாதாரத்துறையினர் மிகுந்த எச்சரிக்கையுடன் மதுரை தத்தனேரி மயானத்துக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரது உடலுக்கு மதுரை மாநகர காவல்துறை சார்பில் 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து பால்துரையின் உடலுக்கு மதுரை போலீஸ் துணை கமிஷனர் சிவபிரசாத் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் பால்துரையின் உடல் தகனம் செய்யப்பட்டது.
பால்துரையின் மனைவி மங்கையர்திலகம் கூறும் போது, “எனது கணவருக்கும் சாத்தான்குளம் சம்பவத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனது கணவர் உயிரிழப்புக்கு தட்டார்மடம் இன்ஸ்பெக்டரும், சாத்தான்குளம் போலீஸ் நிலைய பெண் எழுத்தர் ஒருவரும், மற்றொரு போலீஸ்காரரும்தான் காரணம். அவர்கள்தான் எனது கணவரை இந்த வழக்கில் சிக்க வைத்துவிட்டனர். மேலும் எனது கணவர் மரணம் அடைவதற்கு முன்பாக என்னிடம், அவர்களை விட்டு விடாதே என்றும், எனது வேலையை மகனுக்கு வாங்கிக் கொடுங்கள் என்றும் கூறினார்” என தெரிவித்தார்.
பால்துரையின் மகன், மகள் ஆகியோர் கூறும் போது, “எனது தந்தைக்கும் சாத்தான்குளம் வழக்குக்கும் எந்த தொடர்பும் இல்லை. சி.பி.ஐ. உரிய முறையில் விசாரணை நடத்தி எனது தந்தை நிரபராதி என்று தெரிவிக்க வேண்டும்” என்றனர்.
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு விவகாரமே கொரோனா பிரச்சினையை அடிப்படையாக கொண்டதுதான். இந்த கொலை வழக்கு பற்றி விசாரிக்க டெல்லியில் இருந்து வந்த 8 சி.பி.ஐ. அதிகாரிகளில் 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. விசாரணையில் அவர்களுக்கு உதவியாக இருந்த மதுரையைச் சேர்ந்த சில சி.பி.ஐ. அதிகாரிகளும் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
இப்போது, அந்த கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உயிரிழந்து இருக்கிறார்.
Related Tags :
Next Story