வயநாடு அருகே, புலி தாக்கி வன ஊழியர்கள் 2 பேர் காயம் - ஹெல்மெட் அணிந்திருந்ததால் உயிர் தப்பினர்
வயநாடு அருகே புலி தாக்கி வன ஊழியர்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள், ஹெல்மெட் அணிந்திருந்ததால் உயிர் தப்பினர்.
கூடலூர்,
கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் புல்பள்ளி அருகே சாத்தமங்கலம் கிராம பகுதியில் கடந்த 2 வாரங்களாக புலி நடமாட்டம் இருந்து வந்தது. அதை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில், வனச்சரகர் சசிக்குமாரன், வன காவலர் மானுவேல் ஜார்ஜ் (வயது 34) ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தவாறு சாத்தமங்கலம் கிராமத்துக்கு சென்று புலி நடமாட்டம் குறித்து ஆய்வு செய்தனர்.
அப்போது புதர்மறைவில் படுத்து கிடந்த புலி திடீரென்று அவர்கள் 2 பேர் மீதும் பாய்ந்து தாக்கியது. இதில் வனச்சரகர் சசிக்குமாரன் (வயது 50) தலையில் புலி கடிக்க முயன்றது. அதை தடுக்க முயன்ற போது உடலில் காயம் ஏற்பட்டது. அவர், ஹெல்மெட் அணிந்திருந்ததால் தலையில் காயம் ஏற்பட வில்லை.
ஆனாலும் புலியிடம் சிக்கிய வனச்சரகர் சசிக்குமாரனை வன காவலர் மானுவேல் ஜார்ஜ்புலி காப்பாற்ற முயன்றார். அவர் புலியை விரட்ட முயன்றார். இதனால் சீற்றம் அடைந்த புலி சசிக்குமாரனை விட்டு மானுவேல் ஜார்ஜ் மீது பாய்ந்து தாக்கியது. அவர் புலியிடம் இருந்து தப்பிக்க போராடினார். அவரின் கூச்சல் சத்தம் கேட்டு கிராம மக்கள் விரைந்து வந்தனர். அவர்கள் சத்தம் போட்டு புலியை விரட்டியடித்தனர்.
காயத்துடன் உயிர் தப்பிய 2 பேரும் கோழிக்கோடு அரசு மருத்துவ கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்க ளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே புல்பள்ளி வனத்துறையினர் புலியை பிடிக்க சாத்தமங்கலம் கிராமத்தில் நேற்று கூண்டு வைத்தனர். அங்கு கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். புலியின் அட்டகாசத்தால் கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர். கடந்த 1½ மாதங்களுக்கு முன்பு சுல்தான் பத்தேரி பகுதியில் ஆதிவாசி வாலிபர் ஒருவரை புலி கடித்து தின்றது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story