திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி தீக்குளிக்க முயற்சி


திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 11 Aug 2020 11:00 AM IST (Updated: 11 Aug 2020 10:53 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல்,

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வாலிபர் உள்பட 2 பேர் மொபட்டில் வந்தனர். அதில் ஒருவர், மொபட்டில் கொண்டு வந்த பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை எடுத்தார். பின்னர் திடீரென பாட்டிலில் இருந்த பெட்ரோலை தனது உடலில் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார். அதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போலீசார் துரிதமாக செயல்பட்டு தீக்குளிப்பை தடுத்தனர்.

மேலும் பெட்ரோல் மீதம் இருந்த பாட்டில் மற்றும் தீப்பெட்டி ஆகியவற்றை அவரிடம் இருந்து போலீசார் பறித்தனர். பின்னர் அவர் உடலில் தண்ணீரை ஊற்றினர். இதையடுத்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் குஜிலியம்பாறை அருகே உள்ள உரல்உருட்டுபட்டியை சேர்ந்த விவசாயி பழனிசாமி (வயது 55) என்று தெரியவந்தது.

தீக்குளிக்க முயன்றதற்கான காரணம் குறித்து பழனிசாமி போலீசாரிடம் கூறும்போது, எனக்கு சொந்தமாக 1 ஏக்கர் 11 சென்ட் நிலம் உள்ளது. அதில் விவசாயம் செய்து வருகிறேன். எனது நிலத்துக்கு போலி ஆவணம் தயாரித்து என்னுடைய உறவினர்கள் அவர்களுடைய பெயரில் பத்திரப்பதிவு செய்துள்ளனர். இதனால் என்னுடைய நிலத்தை அபகரிக்க முயற்சி நடக்கிறது. இதுகுறித்து புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதனால் எனது மகனுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தேன். அப்போது, விரக்தியில் தீக்குளிக்க முயன்றேன் என்றார்.

பின்னர் அவரை, தாடிக்கொம்பு போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக போலீசார் அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே பழனிசாமி மீது, தற்கொலைக்கு முயன்றதாக தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story