குமரியில் கடல் சீற்றம் நீடிப்பு: மீண்டும் உடைந்த துறைமுக பழைய பாலம்
குமரியில் கடல் சீற்றம் நீடித்து வருவதால், குளச்சல் துறைமுக பழைய பாலம் மீண்டும் உடைந்து கடலில் விழுந்தது.
குளச்சல்,
குமரியில் கடல் சீற்றம் கடந்த சில நாட்களாக நீடிக்கிறது. இதன் காரணமாக கடல் அலைகள் பல அடி உயரத்துக்கு எழுந்து, குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து விடுவதால் வீடுகள், சாலைகள் உள்ளிட்டவை சேதம் அடைந்து வருகின்றன.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரையுமன்துறை பகுதியில் ஏற்பட்ட கடல் சீற்றம் காரணமாக இரையுமன்துறை துறைமுக பகுதி முகத்துவாரம் கடல் அலையில் சிக்கி உடைந்து கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டது. துறைமுகத்தை பாதுகாக்க அமைக்கப்பட்டிருந்த அலை தடுப்பு சுவரான முகத்துவாரமே அடித்துச் செல்லப்பட்டது. அந்த பகுதி மீனவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதே சமயத்தில் அழிக்கால், தேங்காப்பட்டணம் துறைமுகத்தில் மீனவர்கள் உயிரிழந்த சோக சம்பவமும் நடந்தது. இந்தநிலையில் குளச்சல் துறைமுக பழைய பாலம் மீண்டும் கடல் சீற்றத்தால் உடைந்து விழுந்தது.
இந்த குளச்சல் துறைமுக பாலம் கடந்த 1989-ம் ஆண்டு அப்போதைய தி.மு.க. ஆட்சியின் போது கட்டப்பட்டது. சுமார் 170 மீட்டர் தூரம் வரை பாலம் கட்டி முடிக்கப்பட்ட பிறகு இந்த பணி பாதியில் கைவிடப்பட்டது. பின்னர் இந்த பாலத்தை கப்பலில் மணல் ஏற்றுவதற்காக மணவாளக்குறிச்சி ஐ.ஆர்.இ. மணல் ஆலை பயன்படுத்தியது. 1995-க்கு பிறகு கப்பல்கள் இங்கு வருவதை நிறுத்திக் கொண்டதால் இந்த பாலம் பயனற்று போனது.
அதன் பிறகு இந்த பாலம் சுற்றுலா தலமாக மாறியது. மாலை நேரங்களில் பொழுதுபோக்கிற்காக கடற்கரைக்கு செல்லும் பொதுமக்கள் பாலத்தில் அமர்ந்து கடல் அழகு மற்றும் சூரியன் மறையும் காட்சியை ரசித்து செல்வர். கடந்த சில ஆண்டுகளாக பாலத்தில் காங்கிரீட் பெயர்ந்தும், உப்புக்காற்றில் கம்பிகளில் துருப்பிடித்து மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. குளச்சலில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட கடல் சீற்றத்தினால் ராட்சத அலைகள் எழுந்ததால் துறைமுக பாலத்தின் ஒரு பகுதி பெயர்ந்து கடலில் விழுந்தது. அப்பகுதியில் 3 தூண்கள் தனியாக காணப்பட்டது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் எழுந்த ராட்சத அலைகள் பாலத்தின் மீது மோதியது. இதில் பாலத்தின் 10 மீட்டர் நீளம் உள்ள மற்றொரு பகுதியும் கடலுக்குள் விழுந்தது. இதனால், காங்கிரீட் பெயர்ந்து விழுந்த பகுதியில் மேலும் 5 தூண்கள் என மொத்தம் 8 தூண்கள் மட்டும் தனியாக தெரிகிறது. ஏற்கனவே கடந்த சுனாமி, ஒகி புயல் போன்ற தாக்குதல்களில் 70 மீட்டர் அளவு காங்கிரீட் பெயர்ந்தும், 7 தூண்களும் உடைந்து கடலில் விழுந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த சம்பவத்தால் பாலம் ஆபத்தான பகுதியாக மாறி உள்ளது. எனவே, சேதமடைந்துள்ள இந்த பாலத்தின் மேல் பொதுமக்கள் செல்லாமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
Related Tags :
Next Story