சுதந்திர தினத்தன்று, பெங்களூருவில் முதல்-மந்திரி எடியூரப்பா தேசிய கொடி ஏற்றுகிறார்


சுதந்திர தினத்தன்று, பெங்களூருவில் முதல்-மந்திரி எடியூரப்பா தேசிய கொடி ஏற்றுகிறார்
x
தினத்தந்தி 12 Aug 2020 4:12 AM IST (Updated: 12 Aug 2020 4:12 AM IST)
t-max-icont-min-icon

முதல்-மந்திரி எடியூரப்பா கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டதுடன், அவருக்கு வீட்டு தனிமையிலும் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வருகிற 15-ந் தேதி சுதந்திர தினவிழாவுக்கு முதல்-மந்திரி எடியூரப்பா தேசிய கொடியை ஏற்ற உள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக மாநில முதல்-மந்திரியாக இருந்து வருபவர் எடியூரப்பா. இவருக்கு கடந்த 2-ந் தேதி கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் பெங்களூரு பழைய விமான நிலைய ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா அறிகுறி இல்லாமல் இருந்தாலும், வயது மூப்பு காரணமாக டாக்டர்களின் அறிவுரைப்படி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று முன்தினம் முழுமையாக குணமடைந்தார்.

மேலும் முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, நேற்று முன்தினம் மாலையில் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். என்றாலும், 3 நாட்கள் வீட்டு தனிமையில் இருந்து முழுமையாக ஓய்வெடுக்கும்படி முதல்- மந்திரி எடியூரப்பாவிடம் டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

தேசிய கொடியை...

முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதும், அவரது காவேரி இல்லம் வருகிற 16-ந் தேதி வரை சீல் வைக்கப்படுவதாக நோட்டீசு ஒட்டப்பட்டது. மேலும் அங்கு வசிப்பவர்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்றும் மாநகராட்சியின் சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது. இதன் காரணமாக வருகிற 15-ந் தேதி பெங்களூருவில் உள்ள மானேக்‌ஷா விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் சுதந்திர தினவிழாவில் எடியூரப்பா கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றுவாரா? என்ற கேள்வி எழுந்தது. அவருக்கு பதிலாக துணை முதல்-மந்திரிகள் 3 பேரில் ஒருவர் தேசிய கொடியை ஏற்றி வைக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில், கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ள முதல்-மந்திரி எடியூரப்பா வருகிற 15-ந் தேதி பெங்களூரு மானேக்‌ஷா விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் சுதந்திர தினவிழாவில் தேசிய கொடியை ஏற்றி வைக்க இருப்பதாக முதல்-மந்திரி அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதற்கான ஏற்பாடுகளை முதல்-மந்திரி அலுவலக அதிகாரிகள், ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

முதல்-மந்திரிக்கு விதிவிலக்கு

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ள முதல்-மந்திரி எடியூரப்பா தன்னுடைய காவேரி இல்லத்தில் இருந்தபடியே அலுவலக பணிகளை நேற்று மேற்கொண்டார். அதே நேரத்தில் டாக்டர்களின் அறிவுரைப்படி 3 நாட்கள் ஓய்வெடுத்த பின்பு மீண்டும் அலுவலக பணியில் எடியூரப்பா ஈடுபட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் முதல்-மந்திரி எடியூரப்பா, அதுதொடர்பாக மந்திரிகள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த வேண்டி உள்ளது. மேலும் மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை தீர்க்க வேண்டிய பொறுப்பு அவருக்கு இருக்கிறது. அதன்காரணமாக அவர் வீட்டு தனிமையில் இருக்க வேண்டிய அவசியமில்லை. மேலும் இந்த விஷயத்தில் அவருக்கு விதிவிலக்கு இருக்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக வருகிற 15-ந் தேதி சுதந்திர தினவிழாவின் போது முதல்-மந்திரி எடியூரப்பா தேசிய கொடியை ஏற்றி வைப்பார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story