திருச்சியில், ரூ.4½ லட்சம் போதை பொருள் கடத்திய 5 பேர் கைது - கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 கார்கள் பறிமுதல்
திருச்சியில் ரூ.4½ லட்சம் போதை பொருள் கடத்திய 5 பேர் கைது செய்யப்பட்டனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டாக்டரின் காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி,
திருச்சி வழியாக மதுரைக்கு காரில் போதை பொருளான ஒபியம் பவுடர் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து திருச்சி மண்டல போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு துணை சூப்பிரண்டு காமராஜ் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு மன்னார்புரம் ரவுண்டானா அருகில் கார்களை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது ஒரு காரில் 2 பாட்டில்களில் ஒபியம் பவுடர் இருந்ததை போலீசார் கண்டு பிடித்து அதனை பறிமுதல் செய்தனர். பெரம்பலூரில் இருந்து இதனை கடத்தி கொண்டு வந்ததாக பெரம்பலூர் ரோவர்ஸ் சாலையை சேர்ந்த ருவாண்டோ அடைக்கலராஜ் (வயது 42), திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் மான்பிடி மங்கலத்தை சேர்ந்த ராஜா என்கிற அத்தடியான் (44), பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூரை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் (40) வெண்கலம் என்ற கிராமத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (42), ஆறுமுகம் (65) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருளின் எடை ஒரு கிலோ 800 கிராம். இதன் மதிப்பு சுமார் ரூ.4½ லட்சமாகும். இதனை மதுரைக்கு கடத்தி கொண்டு செல்ல முயன்றபோது திருச்சியில் பிடிபட்டு உள்ளது. மதுரையில் இதனை யாருக்காக கொண்டு சென்றார்கள்? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 கார்களையும் போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர்.
இதில் ஒரு கார் பெரம்பலூரை சேர்ந்த சித்தா டாக்டர் ஒருவருக்கு சொந்தமானதாகும். அந்த டாக்டர் நேற்று முன்தினம் காப்பீடு திட்டம் தொடர்பான ஒரு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக திருச்சி திருவெறும்பூருக்கு வந்து உள்ளார். ருவாண்டோ அடைக்கலராஜ் டாக்டரின் பக்கத்து வீட்டில் வசித்து வருவதால் அவரை நம்பி காரை கொடுத்து உள்ளார். ஆனால் அந்த கார் போதை பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதால் தற்போது போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
கைது செய்யப்பட்ட 5 பேரும் நேற்று மாலை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை நடத்தி முடிக்கப்பட்ட பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.
Related Tags :
Next Story