சென்னை-ஐதராபாத்துக்கு மேலும் 12 லாரிகளில் அமோனியம் நைட்ரேட் அனுப்பி வைக்கப்பட்டது
சென்னை மணலி துறைமுகத்தில் உள்ள சரக்கு பெட்டக நிலையத்தில் தேக்கி வைக்கப்பட்டிருந்த அமோனியம் நைட்ரேட் 12 கன்டெய்னர்கள் மூலம் 2-ம் கட்டமாக ஐதராபாத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
திருவொற்றியூர்,
கடந்த சில நாட்களுக்கு முன்பு லெபனான் நாட்டின் பெய்ரூட் நகரில் அமோனியம் நைட்ரேட் என்ற வேதிப்பொருள் திடீரென வெடித்து தீப்பற்றி எரிந்ததால் ஏற்பட்ட விபத்தில் நூற்றுக்கணக்கானோர் இறந்த சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாகியது.
இந்நிலையில் சுமார் 690 டன் அமோனியம் நைட்ரேட் வடசென்னையில் அமைந்துள்ள மணலி துறைமுகத்தில் இருப்பு வைக்கப்பட்டு இருப்பதாக வெளியான செய்தி சென்னை மாநகர பொது மக்களை கதிகலங்க செய்தது.
இதைத்தொடர்ந்து தீயணைப்புத்துறை இயக்குனர் சைலேந்திரபாபு தலைமையில் போலீசார், சுங்கத்துறை வெடிப்பொருள் கட்டுப்பாட்டு துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அதிகாரிகள் மணலியில் உள்ள துறைமுக சரக்கு பெட்டக முனையத்திற்கு சென்று அமோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டிருந்த கன்டெய்னர்களை ஆய்வு செய்தனர்.
12 கன்டெய்னர்கள் அனுப்பினர்
விசாரணையில், வேளாண் உரம் தயாரிக்கவும், வெடிப்பொருளாகவும் பயன்படுத்தக்கூடிய வேதிப்பொருளை கரூரைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று கடந்த 2015-ம் ஆண்டு சென்னை துறைமுகம் மூலம் இறக்குமதி செய்தது. ஆனால் அவற்றை கொண்டு செல்வதற்கு முறையான உரிய உரிமம் அந்த நிறுவனம் வழங்காததால் அமோனியம் நைட்ரேட் ஏற்றிவரப்பட்ட 37 கன்டெய்னர்களையும் சுங்கத்துறை அதிகாரிகள் சென்னை மணலி துறைமுகத்தில் தேக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, இருப்பு வைக்கப்பட்ட அமோனியம் நைட்ரேட்டை அப்புறப்படுத்த அதிகாரிகள் முடிவு செய்தனர்.
பின்பு ஏலம் எடுத்த தெலுங்கானாவில் ஐதராபாத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனம் கடந்த ஞாயிற்றுக்கிழமை 10 கன்டெய்னர்களில் 181 டன் அமோனியம் நைட்ரேட்டை ஐதராபாத்துக்கு கொண்டு சென்றது.
இந்நிலையில் நேற்று 2-ம் கட்டமாக மேலும் 12 கன்டெய்னர்கள் லாரிகள் மூலம் 229 டன் அமோனியம் நைட்ரேட் ஐதராபாத் அனுப்பி வைக்கப்பட்டன. மீதமுள்ள 15 கன்டெய்னர்கள் 2 நாட்களுக்குள் ஐதராபாத் அனுப்பி வைக்கப்படும் என்று வெடிப்பொருள் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story