வேளாங்கண்ணியில், கத்தியால் குத்தி லாட்ஜ் ஊழியர் கொலை - சக ஊழியர் வெறிச்செயல்
வேளாங்கண்ணியில் கத்தியால் குத்தி லாட்ஜ் ஊழியர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சக ஊழியரை போலீசார் தேடி வருகிறார்கள்.
வேளாங்கண்ணி,
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி முச்சந்தி அருகே ஒரு லாட்ஜ் உள்ளது. இந்த லாட்ஜில் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் முகுந்தபுரம் பகுதியை சேர்ந்த முரளிதாஸ் பிள்ளை மகன் முகேஷ்(வயது 32) என்பவர் வேலை செய்து வந்தார். இதே லாட்ஜில் சேலம் மாவட்டம் காந்தி நகர் பழைய காலனி பகுதியை சேர்ந்த மாது மகன் சதீஷ்குமார்(36) என்பவரும் வேலை பார்த்து வந்தார். இவர்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
நேற்று மாலை 6 மணியளவில் முகேசும், சதீஷ்குமாரும் பணியில் இருந்தபோது அவர்கள் இருவருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு முற்றியதில் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அதைப்பார்த்த லாட்ஜ் அருகே உள்ள ஒரு வீட்டில் வசித்து வரும் சாம்சன் பிராங்கிளின்(39) என்பவர் அங்கு வந்து தகராறை விலக்கி விட முயன்றார்.
இதனால் ஆத்திரம் அடைந்த முகேஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சதீஷ்குமாரை சரமாரியாக குத்தினார். இதை தடுக்க முயன்ற சாம்சன் பிராங்கிளினுக்கும் கத்திக்குத்து விழுந்தது. இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த சதீஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சாம்சன் பிராங்கிளின் படுகாயம் அடைந்தார். உடனே சம்பவ இடத்தில் இருந்து முகேஷ் தப்பி ஓடி விட்டார்.
இது குறித்து தகவல் அறிந்த வேளாங்கண்ணி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்யராஜ், சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த சாம்சன் பிராங்கிளினை சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சதீஷ்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த நாகை துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார். இது குறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய முகேசை தேடி வருகிறார்கள். கத்திக்குத்தில் காயம் அடைந்த சாம்சன்பிராங்கிளின் வேளாங்கண்ணி நகர அ.தி.மு.க. செயலாளராக உள்ளார்.
கத்தியால் குத்தி லாட்ஜ் ஊழியர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் வேளாங்கண்ணி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story