மூணாறு நிலச்சரிவில் பலியானவர்களின் உறவினர்களுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆறுதல்


மூணாறு நிலச்சரிவில் பலியானவர்களின் உறவினர்களுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆறுதல்
x
தினத்தந்தி 12 Aug 2020 1:54 AM GMT (Updated: 12 Aug 2020 1:54 AM GMT)

மூணாறு நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் உறவினர்களுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆறுதல் கூறினார்.

ஓட்டப்பிடாரம்,

ஓட்டப்பிடாரம் ஒன்றியம் கீழக்கோட்டை ஊராட்சி கோவிந்தபுரம் பகுதியை சேர்ந்த கண்ணன், அவரது ஒரு மகன், 2 மகள்கள் ஆகிய 4 பேரும் மூணாறு பகுதியில் நடந்த நிலச்சரிவில் சிக்கி இறந்து உள்ளனர். இதைத்தொடர்ந்து அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று காலை கோவிந்தபுரத்துக்கு சென்றார். அங்கு இறந்தவர்களின் உறவினர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அங்கு வைக்கப்பட்டு இருந்த இறந்தவர்களின் உருவப்படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இறந்த கண்ணனின் உறவினர் மோகனிடம் ரூ.25 ஆயிரம் வழங்கினார்.

பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

90 சதவீதம்

கேரளா மாநிலம் மூணாறு பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பணியாளர்கள் ஏராளமானோர் தங்கியிருந்து பணியாற்றி வருகின்றனர். கடந்த 6-ந் தேதி நடந்த நிலச்சரிவில் இறந்தவர்களில் 90 சதவீதம் பேர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்களின் உறவினர்கள் ஆவர். 10 சதவீதம் பேர் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்கள். தகவல் அறிந்தவுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுவரை கயத்தாறை சேர்ந்த 24 பேர், கோவிந்தபுரத்தை சேர்ந்த 4 பேர் உள்பட 49 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. கண்ணனின் மனைவி சீத்தாலட்சுமி மீட்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

விவரம் சேகரிப்பு

இந்த நிலச்சரிவில் பலியானவர்கள் உடல்கள் மீட்கப்பட்ட பிறகு, முழு தகவலும் கிடைத்த பின்னர், எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், அதில் எத்தனை பேர் ஆதரவற்ற நிலையில் இருக்கிறார்கள், பெற்றோரை இழந்த ஆதரவற்ற குழந்தைகள் ஆனாலும் சரி, அதேபோல் பிள்ளைகளை இழந்த முதியவர்கள் ஆனாலும் சரி, அப்படிப்பட்ட நிலையில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்ற முழு விவரம் அறிந்தவுடன் அந்த அறிக்கையை மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.

மேலும் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து முதல்-அமைச்சர் கவனத்துக்கு எடுத்து சென்று, அவர்கள் கேரளாவில் இருந்து திரும்பி வந்து இங்கேயே தங்க வேண்டும் என்று விரும்பினால் அவர்களுக்கு குடியிருப்பு வசதி போன்ற அத்தனை அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படும். கல்வி பயில்கின்ற நிலையில் இருக்கும் குழந்தைகள் இருந்தால் அவர் கள் கல்விக்காகவும், படித்துவிட்டு வேலைக்கு செல்லும் நிலையில் இருப்பவர்களுக்கு வேலைவாய்ப்பும் வழங்க ஆவன செய்யப்படும். ஆஸ்பத்திரிகளில் உள்ளவர் களை பார்ப்பதற்கு, இங்குள்ள உறவினர்களுக்கு உரிய இ-பாஸ் வழங்கப்படும். மேலும் அவர்களுக்கு தேவையான உதவிகளும் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, ஓட்டப்பிடாரம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் எலிசபெத், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹெலன்பொன்மணி, வளர்மதி உள்பட பலர் உடன் இருந்தனர். 

Next Story