பெரம்பலூரில் வேகமாக பரவி வரும் கொரோனா: தடை செய்யப்பட்ட பகுதிகளில் கடைகளை திறக்க அனுமதி கோரி மனு


பெரம்பலூரில் வேகமாக பரவி வரும் கொரோனா: தடை செய்யப்பட்ட பகுதிகளில் கடைகளை திறக்க அனுமதி கோரி மனு
x
தினத்தந்தி 11 Aug 2020 10:00 PM GMT (Updated: 12 Aug 2020 1:56 AM GMT)

பெரம்பலூரில் வேகமாக கொரோனா பரவி வரும் நிலையில், தடை செய்யப்பட்ட பகுதிகளில் மூடப்பட்ட கடைகளை திறக்க அனுமதி கோரி வியாபாரிகள், அதிகாரியிடம் மனு அளித்துள்ளனர்.

பெரம்பலூர், 

பெரம்பலூர் நகரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இருப்பினும், அரசு ஊரடங்கில் கட்டுப்பாடுகளை தளர்த்தி அறிவித்திருக்கும் நிலையில், எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாமல் வங்கிகள், வணிக நிறுவனங்கள், பல்பொருள் அங்காடிகள், உணவகங்கள், ஜவுளிக்கடைகள் உள்ளிட்ட அனைத்து வகையான கடைகளிலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் வியாபாரம் நடைபெற்று வந்தது. பூசாரிதெரு, பள்ளிவாசல் தெரு, கடைவீதி, சூப்பர்பஜார்தெரு, தபால் நிலையத்தெரு ஆகிய பகுதிகளில் பண்டிகை காலங்களில் இருப்பதை போன்று பொதுமக்கள் கூட்டம் வரம்பின்றி காணப்பட்டது. பெரம்பலூர் நகரை பொறுத்தவரை பஸ்கள் இயங்காவிட்டாலும், ஷேர் ஆட்டோக்களில் இடைவெளியின்றி பயணிகள் ஒருவருக்கு ஒருவர் இடைவெளியின்றி நெருக்கமாக உட்கார்ந்து பயணம் செய்து வருகின்றனர்.

இதற்கிடையே பெரம்பலூரில் பிரதான பகுதியான பழைய பஸ் நிலைய பகுதிகளில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடைகளில் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் வாயிலாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. ஜவுளிக்கடைகள் உள்ளிட்ட கடைகளில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளான வெங்கடேசபுரம் பிரதான சாலையின் தென்பகுதி, பழமுதிர்ச்சோலை, அதன் அருகே உள்ள 3 வங்கிக்கிளைகள், பாத்திமா பள்ளி முதல் கடைவீதியில் கோ-ஆப்டெக்ஸ் வரையிலும், பெரியார் சிலை முதல் அம்பேத்கர் சிலை வரையிலும், தலைமை தபால் நிலையத்தெரு, மார்க்கெட் தெரு ஆகிய பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட இந்த பகுதிகளில் உள்ள சுமார் 500-க்கும் மேற்பட்ட கடைகள் நேற்று முன்தினம் முதல் மூடப்பட்டுள்ளன.

இந்த நிலையில், பெரம்பலூர் நகர வணிகர்கள் சங்கத்தினர், ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள், பலசரக்கு கடைகள், மளிகைக்கடை உள்ளிட்ட அனைத்து வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் நேற்று நகராட்சி ஆணையர் குமரி மன்னனை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், கடைகளை திறந்து சமூக இடைவெளியை பின்பற்றி வியாபாரம் செய்ய அனுமதி அளிக்க வேண்டும், என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக்கொண்ட ஆணையர், சுகாதாரத்துறையினரின் ஆலோசனையின்படி கடைகளை திறக்க அனுமதி அளிப்பதாகவும், வருகிற 14-ந் தேதி வரை பொறுத்திருக்குமாறும் வணிகர் சங்கத்தினரிடம் அறிவுறுத்தினார்.

Next Story