திருச்சி அருகே விபத்து: லாரி மீது கார் மோதல்; பெண் உள்பட 2 பேர் பலி - மேலும் 2 பேர் படுகாயம்
திருச்சி அருகே லாரி மீது கார் மோதியதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
கொள்ளிடம் டோல்கேட்,
சென்னை ராயபுரம் வெங்கடாசல தெருவை சேர்ந்தவர் திருநாமப்பெருமாள் (வயது 50). இவர், கன்னியாகுமரி மாவட்டம் அருணை பகுதியில் உள்ள தனது உறவினர் இல்ல துக்க நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக மனைவி விஜயலட்சுமி (45), மகன் விக்னேஷ் (21) மற்றும் உறவினர் ராயப்பேட்டையை சிவா (30) ஆகியோருடன் நேற்று காலை ஒரு காரில் புறப்பட்டார். காரை சிவா ஓட்டினார். காரின் முன் இருக்கையில் விஜயலட்சுமியும், பின் இருக்கையில் திருநாமப்பெருமாளும், விக்னேசும் அமர்ந்திருந்தனர்.
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே பழுர் என்ற இடத்தில் கார் வந்தபோது, முன்னால் புறவழிச்சாலை பணிக்காக டிப்பர் லாரி ஒன்று மண் ஏற்றி சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த லாரி, வலதுபுறம் திரும்பியபோது கார் திடீரென்று லாரியின் டீசல் டேங்க் பகுதியில் பயங்கர வேகத்தில் மோதியது.
மோதிய வேகத்தில் காரின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. இந்த விபத்தில் சிவாவும், விஜயலட்சுமியும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். விபத்து நடந்தது, சென்னை தேசிய நெடுஞ்சாலை என்பதால் அந்த வழியாக சென்றவர்கள் தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டு இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர்.
தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்த திருநாமப்பெருமாள், விக்னேஷ் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த சிவா, விஜயலட்சுமி ஆகியோர் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த விபத்து குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிப்பர் லாரி டிரைவர் மதுரையை சேர்ந்த செல்லத்துரை (35) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டிப்பர் லாரி சாலையின் வலதுபுறம் திரும்பியதை சற்றும் எதிர்பாராத சிவா லாரியின் மீது மோதி விட்டார். கார், லாரியின் டீசல் டேங்க் மீது மோதியதில் டீசல் டேங்க் வெடிக்கவில்லை என்றாலும் பெரும்பாலான டீசல் சாலையில் கொட்டி ஓடியது. இதற்கிடையே தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீ விபத்து ஏற்படாமல் இருக்க டீசல் டேங்க் மற்றும் சாலையில் தண்ணீரை பீய்ச்சி அடித் தனர்.
Related Tags :
Next Story