தஞ்சையில், கொரோனா தடுப்பு பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு
தஞ்சையில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து கலெக்டர் கோவிந்தராவ் ஆய்வு செய்தார்.
தஞ்சாவூர்,
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடந்தது. இதற்கு கலெக்டர் கோவிந்தராவ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா தடுப்பு பணியில் சேவை மனப்பான்மையுடன் முன்களத்தில் பணியாற்றி வரும் சுகாதாரத்துறையினர், வருவாய்த்துறையினர், போலீசார், டாக்டர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளை சேர்ந்த அலுவலர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் தங்களின் வீடுகளிலேயே தனிமைப்படுத்தி கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
டாக்டர்களின் பரிந்துரை மற்றும் அலுவலர்களின் ஆய்வுக்கு பின்னர் கொரோனா நோயாளிகள் தங்களின் வீடுகளிலேயே தனிமைப்படுத்தி கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர். வேறு ஏதேனும் இணை நோய் உள்ளவர்கள் தங்களின் வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்ள அனுமதி அளிக்கப்படமாட்டாது. எனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்றி முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக்சேகர் சஞ்சய், மாவட்ட வருவாய் அலுவலர் அரவிந்தன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, மாநகராட்சி ஆணையர் ஜானகிரவீந்திரன், வருவாய் கோட்டாட்சியர் வேலுமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் சுதந்திர தினவிழா குறித்து ஒருங்கிணைப்பு கூட்டம் நடந்தது. இதற்கு கலெக்டர் கோவிந்தராவ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர், வருகிற 15-ந் தேதி தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர தினவிழா நடைபெற உள்ளது. அரசின் வழிகாட்டுதலின்படி கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான தனிமனித இடைவெளி, முக கவசம் அணிதல், கிருமிநாசினி பயன்படுத்துதல் ஆகியவற்றுடன் சுதந்திர தினவிழா நடைபெற உள்ளது. விழாவிற்கு வருபவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் வெப்பஅளவு பரிசோதனை செய்ய வேண்டும். அனைத்துத்துறை அலுவலர்களையும் ஒருங்கிணைத்து சுதந்திர தினவிழாவை சிறப்பாக நடத்திடும் வகையில் வருவாய்த்துறை அலுவலர்கள் பணியாற்ற வேண்டும் என்றார்.
Related Tags :
Next Story