கர்நாடகா, கேரளாவில் மழை குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 36 ஆயிரம் கனஅடியாக சரிவு - மேட்டூருக்கு 40 ஆயிரம் கனஅடி நீர் வருகிறது


கர்நாடகா, கேரளாவில் மழை குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 36 ஆயிரம் கனஅடியாக சரிவு - மேட்டூருக்கு 40 ஆயிரம் கனஅடி நீர் வருகிறது
x
தினத்தந்தி 12 Aug 2020 3:30 AM IST (Updated: 12 Aug 2020 7:26 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகா, கேரளாவில் மழை குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு 36 ஆயிரம் கனஅடியாக சரிவடைந்தது. மேலும் மேட்டூருக்கு வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடி நீர் வந்துகொண்டிருந்தது.

தர்மபுரி,

கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களில் பெய்த கனமழை காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் வேகமாக நிரம்பின. இதன் காரணமாக 2 அணைகளில் இருந்தும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்திற்கு வினாடிக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் கனஅடி உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் காவிரி நுழைவிடமான கர்நாடக- தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லை வந்தடைந்தது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் கர்நாடகா, கேரளாவில் மழை பெய்வது குறைந்ததால் காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1 லட்சத்து 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக குறையத்தொடங்கியது. அதன்படி நேற்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 60 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.

இந்த நீர்வரத்து மேலும் குறைந்து பகல் 1 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 45 ஆயிரம் கனஅடியாக சரிவடைந்தது. மேலும் மாலை 5 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 36 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு கீழ் தண்ணீர் செல்கிறது. நீர்வரத்து குறைந்தபோதிலும் மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. வெள்ளப்பெருக்கால் ஒகேனக்கல்லில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.

ஒகேனக்கல், சத்திரம், நாடார் கொட்டாய், ஊட்டமலை உள்ளிட்ட காவிரி கரையோர பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்தபடி சென்றது. தொடர்ந்து போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் மற்றும் வருவாய்த்துறையினர் காவிரி கரையோர பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அருவிக்கு செல்லும் நுழைவு வாயிலுக்கு சீல் வைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் காவிரி ஆற்றில் பொதுமக்கள் யாரும் குளிக்கவோ, இறங்கவோ கூடாது என்று ஒலிப்பெருக்கி மூலம் போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் நடைபாதை உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீரில் அடித்து வரப்பட்ட மரங்கள், செடிகள் ஆங்காங்கே கிடக்கின்றன. காவிரி நுழைவிடமான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் நீர்வரத்தை அளந்து கண்காணித்து வருகின்றனர். ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து மேலும் குறைய வாய்ப்பு உள்ளது என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து குறைந்துள்ளது. நேற்று முன்தினம் காலை அணைக்கு வினாடிக்கு 1 லட்சத்து 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அதன் பிறகு நீர்வரத்து படிப்படியாக குறையத்தொடங்கியது. மேலும் அணையின் நீர்மட்டம் 86.91 அடியாக இருந்தது. அணையில் இருந்து பாசன தேவைக்காக வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இந்த நிலையில் நேற்று காலை நீர்வரத்து வினாடிக்கு 80 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. அணையின் நீர்மட்டம் 95.10 அடியாக உயர்ந்தது. தண்ணீர் வரத்து சரிந்துள்ளதால் அணையின் நீர்மட்டம் உயரும் வாய்ப்பு குறைந்துள்ளது. இதனிடையே நேற்று இரவு 8 மணி நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. நீர்மட்டம் 96.58 அடியாக இருந்தது.

Next Story