மேச்சேரி அருகே, ஏரியில் மூழ்கி 3 மாணவர்கள் பலி


மேச்சேரி அருகே, ஏரியில் மூழ்கி 3 மாணவர்கள் பலி
x
தினத்தந்தி 12 Aug 2020 3:45 AM IST (Updated: 12 Aug 2020 7:46 AM IST)
t-max-icont-min-icon

மேச்சேரி அருகே ஏரியில் மூழ்கி 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேச்சேரி,

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள புக்கம்பட்டி அம்பேத்கர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன்கள் ஹரீஷ் (வயது 16), ரித்தீஷ் (15). அதே பகுதியை சேர்ந்த அய்யனார் என்பவரது மகன் தர்ஷன் (16) மற்றும் கார்த்திக் (17). இவர்கள் 4 பேரும் நண்பர்கள். ஹரீஷ், தர்ஷன் ஆகியோர் 10-ம் வகுப்பும், ரித்தீஷ் 9-ம் வகுப்பும், கார்த்திக் 12-ம் வகுப்பும் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் தற்போது பள்ளிக்கூடங்கள் விடுமுறை என்பதால், அவர்கள் 4 பேரும் புக்கம்பட்டி அருகே உள்ள நாகிரெட்டிப்பட்டி ஏரியில் குளிக்க சென்றனர். கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக ஏரியில் ஆங்காங்கே இருந்த பள்ளங்களில் தண்ணீர் தேங்கி இருந்தது. இதில் ஒரு சில இடங்களில் ஆழம் அதிகமாகவும் இருந்தது.

ஹரீஷ், ரித்தீஷ், தர்ஷன் ஆகிய 3 பேரும் ஏரி தண்ணீரில் இறங்கி குளித்துக்கொண்டிருந்தனர். கார்த்திக் கரையில் அமர்ந்து இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் ஏரியில் நீருக்கு அடியில் சேறும் சகதியும் அதிகமாக இருந்ததால் 3 பேரும் அதில் சிக்கி, தண்ணீரில் மூழ்கினர். இதைப்பார்த்த கார்த்திக் சத்தம்போடவே அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் ஓடி வந்தனர்.

அவர்கள் தண்ணீரில் மூழ்கிய 3 பேரையும் தேடினார்கள். 1 மணி நேரத்துக்கு பிறகு ஹரீஷ், ரித்தீஷ் ஆகியோர் பிணமாக மீட்கப்பட்டனர். மேலும் உயிருக்கு போராடிய தர்ஷனை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் தர்ஷன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் மேச்சேரி போலீசார் விரைந்து சென்று உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் மற்றும் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் 3 பேரின் உடல்களை பார்த்து பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதது மிகவும் பரிதாபமாக இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக மேச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஏரியில் மூழ்கி 3 மாணவர்கள் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story