சேலம் மாவட்டத்தில் புதிய உச்சமாக ஒரே நாளில் 206 பேருக்கு கொரோனா - நாமக்கல்-10, தர்மபுரி-11, கிருஷ்ணகிரி-43


சேலம் மாவட்டத்தில் புதிய உச்சமாக ஒரே நாளில் 206 பேருக்கு கொரோனா - நாமக்கல்-10, தர்மபுரி-11, கிருஷ்ணகிரி-43
x
தினத்தந்தி 12 Aug 2020 3:45 AM IST (Updated: 12 Aug 2020 7:46 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் புதிய உச்சமாக 206 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் நாமக்கல்லில் 10 பேருக்கும், தர்மபுரியில் 11 பேருக்கும், கிருஷ்ணகிரியில் 43 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சேலம்,

சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 128 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 206 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது, சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 136 பேர், ஆத்தூரில் 14 பேர், கொளத்தூரில் 8 பேர், நங்கவள்ளி, ஓமலூரில் தலா 7 பேர், வீரபாண்டியில் 6 பேர், மகுடஞ்சாவடி, கெங்கவல்லியில் தலா 5 பேர், பெத்தநாயக்கன்பாளையத்தில் 4 பேர், எடப்பாடியில் 3 பேர், மேச்சேரி, கொங்கணாபுரம், தாரமங்கலம், காடையாம்பட்டி ஆகிய பகுதிகளில் தலா 2 பேர், சேலம் ஒன்றியம், வாழப்பாடி ஆகிய பகுதிகளில் ஒருவரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். பெங்களூருவில் இருந்து சேலம் வந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,951 ஆக உயர்ந்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை 1,020 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் மதுரை, தர்மபுரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வந்த 3 பேரின் பெயர் நாமக்கல் மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 1,023 ஆக உயர்ந்தது.

இதற்கிடையே நேற்று 3 பெண்கள் உள்பட 10 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. நாமக்கல்லை சேர்ந்த 3 பேர், திருச்செங்கோடு மற்றும் பள்ளிபாளையம் பகுதிகளை சேர்ந்த தலா 2 பேர் உள்பட 10 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதற்கிடையே நேற்று நாமக்கல் மாவட்டத்தில் 31 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர்.

தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அதன்படி தர்மபுரியை சேர்ந்த 35 வயது தீயணைப்பு படைவீரருக்கு சளி, காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. அவரை தனிமைப்படுத்தி பரிசோதித்தபோது கொரோனா தொற்று உறுதியானது. மாட்லாம்பட்டியை சேர்ந்த 55 வயது பெண் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். ஓசூருக்கு சென்று தர்மபுரி திரும்பிய அவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. பாலக்கோட்டை சேர்ந்த 23 வயது வாலிபர், தர்மபுரி ரெயில்வே லைன் பகுதியை சேர்ந்த 27 வயது இளம்பெண், 43 வயது ஆண், வெண்ணாம்பட்டி சக்தி நகரை சேர்ந்த 12 வயது சிறுமி உள்பட 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. இவர்கள் அனைவரும் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 895 ஆக உயர்ந்து உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக கொரோனா வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில் நேற்று ஒரே நாளில் 43 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஓசூர் பகுதியில் 12 பேர் கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். இதே போல் கிருஷ்ணகிரி, பர்கூர், தேன்கனிக்கோட்டை, காவேரிப்பட்டணம், ராயக்கோட்டை, சூளகிரி, ஊத்தங்கரை, மத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பெண்கள், முதியவர்கள் உள்பட 43 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 1,542 ஆக உயர்ந்துள்ளது.

Next Story