கொரோனா சிகிச்சையில், மாவட்டத்தில் ஒரே நாளில் 110 பேர் ‘டிஸ்சார்ஜ்’ - சாவு எண்ணிக்கை 41 ஆக உயர்வு


கொரோனா சிகிச்சையில், மாவட்டத்தில் ஒரே நாளில் 110 பேர் ‘டிஸ்சார்ஜ்’ - சாவு எண்ணிக்கை 41 ஆக உயர்வு
x
தினத்தந்தி 12 Aug 2020 3:30 AM IST (Updated: 12 Aug 2020 7:46 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா சிகிச்சையில் ஒரே நாளில் 110 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டனர். சாவு எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வந்தாலும், சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 110 பேர் டிஸ்சார்ஜ் ஆகியிருந்தனர். 64 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டிருந்தது.

தற்போது ஆயிரத்து 9 பேர் சிகிச்சையில் உள்ளனர். மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 388 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 2 ஆயிரத்து 338 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதேபோல சித்த மருத்துவ சிகிச்சையிலும் 6 நாட்களில் பூரண குணமடைந்து 18 பேர் வீடு திரும்பினர்.

புதுக்கோட்டையை சேர்ந்த 68 வயது முதியவர் ஒருவர் கொரோனாவுக்கு நேற்று பலியாகியிருந்தார். இதனால் சாவு எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.

அரிமளம் ஒன்றியம் ராயவரம் ஊராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவருடைய குடும்பத்தை சேர்ந்த 26 வயது ஆண், 15 வயது சிறுமி, 46 வயது ஆண் ஆகிய 3 பேரை பரிசோதனை செய்ததில் நேற்று அவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ராயவரத்தில் மருந்து கடை நடத்தி வரும் 61 வயது நபருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் அவர் பக்கத்து வீட்டை சேர்ந்த 35 வயது பெண் மற்றும் 21 வயது ஆண் ஆகிய இருவருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடியாபட்டியில் 70 வயதுடைய மூதாட்டிக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நெடுங்குடி கிராமத்தை சேர்ந்த 58 வயது ஆண், கே.புதுப்பட்டியை சேர்ந்த 57 வயது ஆண், 65 வயது பெண் ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ராயவரம் கிராமத்தை சேர்ந்த 21 வயது பெண்ணுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அரிமளம் ஒன்றியத்தில் ராயவரம் கிராமத்தில் மட்டும் ஒரே நாளில் 6 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. ஒன்றியம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆதனக்கோட்டை வட்டாரத்தில் பெருங்களூர், வாராப்பூர், ஆதனக்கோட்டை சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்களில் 2 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஆதனக்கோட்டை வட்டாரத்திற்கு உட்பட்ட குப்புடையான்பட்டி கிராமத்தில் 65 வயது மூதாட்டி கொரோனா பாதிப்பால் நேற்று உயிரிழந்துள்ளார். எம்.குளவாய்ப்பட்டியிலுள்ள 39 வயதுடைய ஆணும், முள்ளூர் கிராமத்தில் 55 வயதுடைய ஆணும் கொரோனா தொற்றால் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர். இதனால் ஆதனக்கோட்டை வட்டாரத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

Next Story