இந்தியில் பெயர் பலகை வைத்ததற்கு எதிர்ப்பு: ராமேசுவரம் கோவில் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் - 30 பேர் கைது
ராமேசுவரம் கோவில் சார்பில் கட்டப்பட்ட தங்கும் விடுதிக்கு இந்தியில் பெயர் பலகை வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் 30 பேரை போலீசார் கைது செய்தனர்.
ராமேசுவரம்,
ராமேசுவரம் பஸ் நிலையம் அருகே ராமநாதசாமி கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் 6½ ஏக்கர் பரப்பளவில் ரூ.29 கோடி நிதியில் பக்தர்கள் தங்கும் விடுதி கட்டும் பணி கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாகவே நடைபெற்று வந்த இந்த தங்கும் விடுதி கட்டும் பணிகள் 90 சதவீதம் முடிந்து தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
100-க்கும் மேற்பட்ட அறைகளும் மற்றும் உணவகங்களும், ஏ.டி.எம், மருந்தகம், வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் இந்த தங்கும் விடுதி கட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த தங்கும் விடுதியின் நுழைவு கட்டிட பகுதியில் யாத்ரி நிவாஸ் என்று இந்தியில் பெயர் பலகை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கு கண்டனம் தெரிவித்தும், உடனடியாக அந்த யாத்ரி நிவாஸ் என்ற இந்தி எழுத்தை அகற்றி தமிழில் தங்கும் விடுதி என மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியும் நேற்று மாவட்ட தலைவர் இளங்கோ தலைமையில் மண்டி தெரு பகுதியில் இருந்து நாம் தமிழர் கட்சியினர் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் கோவிலின் கிழக்கு ரத வீதிகளில் ஊர்வலமாக வந்தனர்.
தொடர்ந்து கோவில் இணை ஆணையர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். 144 தடை உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 30 பேரை கோவில் காவல் நிலைய போலீசார் கைது செய்து ராமேசுவரத்தில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் அடைத்து வைத்தனர். 30 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் நேற்று மாலை அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story