ராஜபாளையத்தில், கொரோனாவுக்கு மேலும் ஒரு டாக்டர் பலி
ராஜபாளையத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒரு டாக்டர் பலியானார்.
ராஜபாளையம்,
ராஜபாளையம் திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோதண்டராமன் (வயது 68). குழந்தைகள் நல டாக்டரான இவர், இந்திய மருத்துவ சங்கத்தின் ராஜபாளையம் கிளை நிறுவனர் மற்றும் தலைவராகவும் இருந்து வந்தார். தன்னார்வ தொண்டு அமைப்பின் மூலமாகவும், சங்கத்தின் மூலமாகவும் பல்வேறு சேவைகளை மக்களுக்கு இவர் செய்து வந்தார்.
இந்தநிலையில் இவருக்கு காய்ச்சல், சளி உள்ளிட்ட பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து சிறிது நாட்கள் இவர் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார்.
இதில் பலன் இல்லாததால் கடந்த மாதம் 20-ந் தேதி மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அப்போது அவருக்கு பரிசோதனை செய்து பார்த்த போது கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். உடல்நிலை சீரானதையடுத்து அவர் வீடு திரும்பினார்.
வீடு திரும்பிய 3 நாட்களிலேயே மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பின்னர் ராஜபாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார். இதையடுத்து மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நேற்று காலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
கடந்த மாதம் ராஜபாளையத்தை சேர்ந்த டாக்டர் சாந்திலால் என்பவர் கொரோனாவால் உயிரிழந்தார். இந்தநிலையில் மேலும் ஒரு டாக்டர் கொரோனாவுக்கு பலியானது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story