கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், மக்காச்சோள விளைபொருட்களை பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கு நிதி உதவி - கலெக்டர் கிரண்குராலா தகவல்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மக்காச்சோள விளைபொருட்களை பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கு நிதி உதவி அளிக்க இருப்பதாக கலெக்டர் கிரண்குராலா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கள்ளக்குறிச்சி,
பிரதமரால் அறிவிக்கப்பட்ட “ஆத்மநிர்பார் பாரத் அபியான்“ திட்டத்தின் ஒரு பகுதியாக அமைப்பு சாரா உணவு பதப்படுத்தும் சிறு நிறுனங்களை வலுப்படுத்தும் விதமாக “பாரத பிரதமர் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான திட்டம்“ அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் 2020-21-ம் ஆண்டு முதல் 2024-25-ம் ஆண்டுவரை 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய அரசு 60 சதவீதம் மற்றும் மாநில அரசு 40 சதவீதம் நிதி பங்களிப்புடன் ஒரு மாவட்டத்துக்கு ஒரு விளைபொருள் என்ற அணுகுமுறையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு மக்காச்சோளம் விளைப்பொருளாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டமானது, மத்திய அமைச்சகத்தின் உணவுப்பதப்படுத்தும் தொழில்துறை வழியாக, தமிழ் நாட்டில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் செயல்படுத்தப்படும். மாவட்ட அளவில் கலெக்டர் தலைமையின் கீழ் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
உணவுப்பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான இத்திட்டத்தின் மூலம் தனிநபர் அடிப்படையில், ஏற்கனவே உணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு நிறுவனங்களை வலுப்படுத்துதல் அல்லது புதிய நிறுவனங்களை தொடங்குதல், குழு அடிப்படையில் பொது உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திதருவது, வர்த்தக முத்திரை மற்றும் சந்தைப்படுத்துதல், தொழில்நுட்ப பயிற்சிகள் போன்ற இனங்களுக்கு நிதி உதவி வழங்கப்படும்.
மேலும், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், சுய உதவி குழுக்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் போன்றவைகளுக்கும் நிதி உதவி வழங்கப்படும். மக்காச்சோளம் விளைபொருட்களை பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள மற்றும் ஈடுபட உள்ள சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இத்திட்டத்தின் மூலம் ஒரு சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனம், தகுதியான திட்ட மதிப்பீட்டில் 35 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை நிதி உதவி பெற்று பயன்பெற வாய்ப்புள்ளது. வர்த்தக முத்திரை மற்றும் சந்தைப்படுத்துதலுக்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படும். மேலும், சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு வங்கி மூலம் தொழில் கடன் ஏற்பாடு செய்து தரப்படும்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள மக்காச்சோளம் விளைப்பொருளை பதப்படுத்தும் தொழிலில் ஏற்கனவே ஈடுபட்டுள்ள மற்றும் புதியதாக ஈடுபட உள்ள நிறுவனங்கள், இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சலுகைகளை பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் விவரங்களுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட வேளாண்மை துணை இயக்குநரை(வேளாண் வணிகம்) நேரிலோ அல்லது 8248110335, 9626889029 மற்றும் 8778012566 ஆகிய செல்போன் எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story