கூடலூரில், மண்சரிவால் அந்தரத்தில் தொங்கும் வீடு


கூடலூரில், மண்சரிவால் அந்தரத்தில் தொங்கும் வீடு
x
தினத்தந்தி 12 Aug 2020 3:00 AM IST (Updated: 12 Aug 2020 9:05 AM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் மண்சரிவு ஏற்பட்டு வீடு அந்தரத்தில் தொங்குகிறது.

கூடலூர்,

கூடலூர் பகுதியில் கடந்த வாரம் முழுவதும் கனமழை பெய்தது. தற்போது மழையின் தாக்கம் குறைந்துள்ளது. இருப்பினும் பாதிப்புகள் தொடர்ந்து கொண்டே உள்ளது. காலை முதல் மதியம் வரை மிதமான வெயில் காணப்படுகிறது. பின்னர் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மண்சரிவும் அதிகரித்து வருகிறது.

கூடலூர் செவிடிப்பேட்டை காமராஜர் காலனியில் மண்சரிவு ஏற்பட்டு ராஜ் என்பவரின் வீடு அந்தரத்தில் தொங்கி காணப்படுகிறது. இதனால் எந்த நேரத்தில் இடிந்து விழுமோ என்ற அச்சத்தில் அவரது குடும்பத்தினர் உள்ளனர். இது குறித்து வருவாய், நகராட்சி துறைக்கு மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மைக்கா மவுண்ட் எஸ்.எஸ்.நகர் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு பொதுமக்கள் நடந்து செல்லும் நடைபாதை உடைந்து விட்டது.

இதனால் அப்பகுதி மக்கள் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். எனவே தடுப்பு சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல் கூடலூர் தாலுகா தேவாலா அருகே நீர்மட்டம் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். பெரும்பாலும் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வீடுகள் உள்ளது.

தொடர் கனமழையால் அப்பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது. இதில் பழனிமுத்து, ராஜம்மாள், நாகராஜா, வள்ளியம்மாள், ராஜேந்திரன் ஆகிய 5 தொழிலாளர்களின் வீடுகள் விரிசல் ஏற்பட்டு சுவர்கள் பிளந்து காணப்படுகிறது. இதனால் எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயம் உள்ளது. இதையொட்டி தொழிலாளர்களின் குடும்பத்தினர் பாதுகாப்பு கருதி உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இது குறித்து வருவாய் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இது குறித்து பாதிக்கப்பட்ட தொழிலாளர் குடும்பத்தினர் கூறியதாவது:-

அன்றாடம் தேயிலை தோட்டம் மற்றும் கூலி வேலைக்கு சென்று பிழைத்து வருகிறோம். கடந்த வாரம் பெய்த கன மழையால் தங்க முடியாத வகையில் வீடுகள் விரிசல்கள் அடைந்துள்ளது. இதனால் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளோம். எனவே புதிய வீடுகள் கட்டுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கவலையுடன் கூறினர்.

இது குறித்து வருவாய்த்துறையினரிடம் கேட்ட போது, மழையால் சேதம் அடைந்த வீடுகள் பற்றி கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. அதன் பின்னர் அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விளக்கம் அளிக்கப்பட்டது.

Next Story