திருப்பூர் அருகே, பிளாஸ்டிக் பொருட்கள் குடோனில் தீ விபத்து - ரூ.1 லட்சம் எரிந்து நாசம்


திருப்பூர் அருகே, பிளாஸ்டிக் பொருட்கள் குடோனில் தீ விபத்து - ரூ.1 லட்சம் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 12 Aug 2020 11:15 AM IST (Updated: 12 Aug 2020 11:11 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் பாண்டியன்நகர் அருகே பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.1 லட்சம் உள்பட பொருட்கள் எரிந்து நாசமாகியது.

அனுப்பர்பாளையம்,

நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 27). இவர் திருப்பூர் பி.என்.ரோடு பாண்டியன்நகரை அடுத்த கூத்தம்பாளையத்தில் வாடகை இடத்தில் பழைய பொருட்கள் வாங்கி, விற்கும் குடோன் நடத்தி வருகிறார். மேலும் பிளாஸ்டிக் பொருட்களை தள்ளுவண்டியில் கொண்டு விற்பனை செய்யும் தொழிலும் செய்து வருகிறார்.

இதற்காக அந்த குடோனில் ஏராளமான பிளாஸ்டிக் பொருட்கள் வைக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் இரவு ஆறுமுகம் வழக்கம் போல குடோனை பூட்டி விட்டு தூங்க சென்று விட்டார். இந்த நிலையில் நேற்று காலை குடோனை திறந்த ஆறுமுகம், சிறிது நேரத்தில் வெளி வேலைக்காக சென்றுவிட்டார். பின்னர் சிறிது நேரத்தில் அந்த குடோனில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதை கண்ட அக்கம்பக்கத்தினர் திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு 2 வண்டிகளில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஆனால் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் அட்டை பெட்டிகள் உள்ளிட்ட பழைய பொருட்களும் ஏராளமாக இருந்ததால் தீ மளமளவென பிடித்து எரிந்தது. இதன் காரணமாக அந்த பகுதி முழுவதும் கரும்புகை வெளியேறி, புகை மண்டலமாக காட்சியளித்தது. சுமார் 1 மணி நேரம் தீயணைப்பு வீரர்கள் போராடி முற்றிலுமாக தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் குடோனில் மரமேஜையில் வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சம் உள்பட ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்களும் தீயில் எரிந்து கருகி நாசமாகின. மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர்.

இதுகுறித்து திருமுருகன்பூண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story