கொரோனா தொற்று அதிகரிப்பு எதிரொலி செவ்வாய்க்கிழமை தோறும் முழுஊரடங்கு நாராயணசாமி தலைமையிலான கூட்டத்தில் முடிவு
கொரோனா தொற்று பாதிப்பு அதிகரிப்பதன் எதிரொலியாக புதுவையில் நாளை முதல் ஓட்டல்கள், கடைகளை திறக்கும் நேரத்தை குறைப்பது, செவ்வாய்க்கிழமை தோறும் முழு ஊரடங்கை அமல்படுத்துவது எனவும் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடந்த பேரிடர் மேலாண்மை குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
புதுச்சேரி,
புதுவையில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவலின் வேகம் அதிகரித்துள்ளது. நாள்தோறும் 150 முதல் 200-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டனர். நேற்று ஒரே நாளில் புதிய உச்சமாக 481 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. ஒட்டுமொத்தமாக கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 96 ஆக உயர்ந்துள்ளது.
பேரிடர் மேலாண்மை குழு கூட்டம்
இந்தநிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அடுத்தகட்டமாக எந்தவிதமான நடவடிக்கை எடுப்பது என்பது தொடர்பாக நேற்று மாலை தலைமை செயலகத்தில் பேரிடர் மேலாண்மை குழுவின் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு குழுவின் தலைவரான முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் சுகாதார அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ், வருவாய்த்துறை அமைச்சர் ஷாஜகான், சட்டமன்ற கட்சி தலைவர்களான எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், சிவா, சாமிநாதன், தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், போலீஸ் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவஸ்தவா, நிதித்துறை செயலாளர் சுர்பீர்சிங், கலெக்டர் அருண் மற்றும் அரசு செயலாளர்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் செவ்வாய்க் கிழமைகள் தோறும் முழுஊரடங்கை அமல்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. தற்போது ஓட்டல்கள், கடைகள் அனைத்தும் காலை 6 மணிமுதல் இரவு 9 மணிவரை செயல்பட்டு வருகின்றன. இவை திறக்கப்படும் நேரத்தை குறைப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
இதுதொடர்பாக முதல்- அமைச்சர் நாராயணசாமி கூட்டம் முடிந்ததும் நிருபர் களிடம் கூறியதாவது:-
தாக்கம் அதிகமாக இருக்கும்
பேரிடர் மேலாண்மை குழு கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு ஆலோசனைகளை வழங்கினார்கள். குறிப்பாக சோதனை முடிவுகள் காலதாமதமாக வருவதால் மக்கள் பாதிக்கப்படுவதாக தெரிவித்தனர். ஜிப்மர் இயக்குனர் இன்னும் 6 வார காலம் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று கூறினார். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்க ஏற்பாடுகளை செய்ய உள்ளோம். பல மாநிலங்களில் முழுமையான ஊரடங்கு அமலில் உள்ளதால் அதை இங்கும் அமல்படுத்த வேண்டும் என்றும் எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்தனர்.
புதுவை மாநிலத்தில் இதுவரை 50 ஆயிரம் பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்து உள்ளோம். அதாவது 12 சதவீதம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 7 சதவீதம் பேருக்குத்தான் சோதனை செய்யப்பட்டுள்ளது. இன்னும் அதிகப்படுத்த திட்டமிட்டு உள்ளோம். கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாளொன்றுக்கு 600 பேருக்கு சோதனை செய்ய நடவடிக்கை எடுக்கிறோம். ஜிப்மரில் தற்போது நாள்தோறும் 1,000 பேருக்கு சோதனை செய்கிறார்கள்.
சுகாதார பணியாளர்கள் நியமனம்
புதுவையில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் சோதனை நடைபெறுகிறது. அதனையும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். இதன்படி நாள் ஒன்றுக்கு 2 ஆயிரம் பேருக்கு சோதனை செய்யும் வாய்ப்பு உள்ளது. அதிகப்படியான சோதனை செய்வதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த முடியும்.
நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான டாக்டர்கள், நர்சுகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள், துப்புரவு பணியாளர்களை இன்னும் ஒருசில நாட்களில் நியமிக்க முடிவு எடுத்துள்ளோம். கொரோனா தொற்று பரிசோதனைக்காக ஆண்டிஜன் கிட்டுகள் 10ஆயிரம் வரவுள்ளது. 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உடைக் கவசம் உள்ளது. உயிர்காக்கும் மருந்தான ரெம்டெசிவர் மருந்தை வாங்க உள்ளோம்.
ஒத்துழைப்பு தர வேண்டும்
கூட்டத்தில் பேசிய எம்.எல்.ஏ.க்கள் மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். ஏற்கனவே நமது மாநில வருமானத்தில் ரூ.200 கோடி துண்டு விழுந்துள்ளது. மத்திய அரசு சரக்கு மற்றும் சேவை வரி மூலம் தரவேண்டிய ரூ.560 கோடியை இன்னும் தரவில்லை. கொரோனா தடுப்பு பணிகளுக்கு மத்திய அரசிடம் இருந்து இதுவரை ரூ.3 கோடி மட்டுமே வந்துள்ளது. இடைக்கால நிவாரணமாக ரூ.225 கோடியும், ஒட்டு மொத்தமாக ரூ.995 கோடியும் வழங்க வேண்டும் என்று நாம் கேட்டுள்ளோம். அதற்கு பிரதமரிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் இல்லை.
தமிழகம், கர்நாடக மாநிலங்களுக்கு மத்திய அரசு தாராளமாக நிதி வழங்கி உள்ளது. ஆனால் நமக்கு நிதி கிடைக்கவில்லை. கூட்டத்தில் கலந்துகொண்ட எம்.எல்.ஏ.க்கள் புதுவையில் பணியாற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் களத்திற்கு செல்ல வேண்டும் என்று கூறினார்கள். ஒரு சில அதிகாரிகள் இன்னும் அரசுக்கு கூடுதல் ஒத்துழைப்பு தரவேண்டும்.
முழு ஊரடங்கு
புதுவையில் தற்போது காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கடைகள் திறந்திருக்கின்றன. இனி காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே கடைகளைத் திறக்க செய்வது என்று முடிவு செய்துள்ளோம். இந்த முடிவு நாளை (வெள்ளிக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. கடைகளைப் பூட்டி விட்டு இரவு 8 மணிக்குள் அனைவரும் வீடு சென்று விடவேண்டும் இரவு 8 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை பொதுமக்கள் நடமாட்டம் தடை செய்யப்படுகிறது.
பக்கத்து மாநிலமான தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது புதுவையில் அதேபோல் ஊரடங்கு கடைபிடிக்க திட்டமிட்டால் அன்றைய தினம் சுப நிகழ்ச்சிகள் நடக்க உள்ளதாக தெரிவித்தனர். எனவே வருகிற செவ்வாய்க்கிழமை முதல் இந்த மாதம் 31-ந் தேதி வரை செவ்வாய்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அன்றைய தினம் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் தனியார் நிறுவனங்கள், வங்கிகள் என அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும். பொதுமக்கள் வெளியில் நடமாடக் கூடாது. ஊரடங்கு மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மண்டபங்களுக்கு சீல்
திருமண நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மேல் திரண்டால் மண்டபங்கள் பூட்டி சீல் வைக்கப்படும். சிறப்பு நிகழ்ச்சிகளில் 20 பேருக்கு மேல் இருக்க கூடாது. மாநில நிதி நிலையை சீரமைத்த பின் மத்திய அரசு நிதி தந்தபின் அரசு முடிவு எடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story