மாயமான மீனவர்களை மீட்க கோரி உறவினர்கள் சாலை மறியல் அமைச்சர் ஜெயக்குமார் சமரசம்


மாயமான மீனவர்களை மீட்க கோரி உறவினர்கள் சாலை மறியல் அமைச்சர் ஜெயக்குமார் சமரசம்
x
தினத்தந்தி 13 Aug 2020 5:57 AM IST (Updated: 13 Aug 2020 5:57 AM IST)
t-max-icont-min-icon

காசிமேட்டில் கடலுக்குள் மீன்பிடிக்க சென்று மாயமான மீனவர்களை மீட்க கோரி அவர்களது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை அமைச்சர் ஜெயக்குமார் சமரசம் செய்து வைத்தார்.

திருவொற்றியூர், 

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த ஜூலை மாதம் 22-ந் தேதி காசிமேடு நாகூரார் தோட்டம் பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் திருவொற்றியூர் குப்பம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் லட்சுமணன், சிவகுமார், பாபு, பார்த்திபன், திருவொற்றியூர் குப்பத்தை சேர்ந்த முருகன், கண்ணன், தேசப்பன், ரகு, லட்சுமிபுரம் குப்பத்தை சேர்ந்த தேசப்பன் உள்பட 10 மீனவர்கள் 10 நாட்களுக்கு தேவையான உணவு பொருட்களுடன் கடலுக்குள் 70 நாட்டிக்கல் தூரத்தில் மீன்பிடிக்கச் சென்றனர்.

வழக்கமாக 7 நாட்களில் கரைக்கு திரும்ப வேண்டிய மீனவர்கள், இதுவரை கரை திரும்பவில்லை. இதுகுறித்து மாயமான மீனவர்களின் குடும்பத்தினர் சென்னை காசிமேடு மீன்துறை உதவி இயக்குனர் வேலனிடம் கோரிக்கை விடுத்தனர். கடலோர காவல் படையினர் கப்பல், ஹெலிகாப்டர் மூலம் தேடியும் மாயமான மீனவர்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை.

சாலை மறியல்

இதனால் ஆத்திரமடைந்த மாயமான மீனவர்களின் உறவினர்கள், நேற்று ராயபுரம் எண்ணூர் விரைவு சாலையில் ஒன்று திரண்டனர். திடீரென அவர்கள், மாயமான மீனவர்களை தேடும் பணியை முடுக்கிவிட வலியுறுத்தியும், 10 பேரையும் பத்திரமாக மீட்க கோரியும், இதுதொடர்பாக துறை அதிகாரிகள் முறையான பதில் அளிக்கவில்லை என்று கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சுமார் 1 மணிநேரம் நீடித்த இந்த சாலை மறியலால் எண்ணூர் விரைவு சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அமைச்சர் ஜெயக்குமார்

இதுபற்றி தகவல் அறிந்ததும் மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், “மாயமான மீனவர்களை கடலோர காவல் படையினர் கப்பல் மூலமாகவும், ஹெலிகாப்டர் உதவியோடும் தேடி வருகிறார்கள். மீனவர்கள் சென்ற படகு கடைசியாக சில தினங்களுக்கு முன்பு விசாகப்பட்டினம் அருகே இருந்ததற்கான சிக்னல்கள் வந்துள்ளது. அதனை வைத்து வெளிமாநிலங்களில் கரையோரமாக தேடி வருகிறோம்” என்றார்.

அமைச்சரின் நம்பிக்கையான பேச்சையடுத்து சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். 

Next Story