கந்து வட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தீக்குளிக்க முயற்சி


கந்து வட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 13 Aug 2020 6:53 AM IST (Updated: 13 Aug 2020 6:53 AM IST)
t-max-icont-min-icon

கந்துவட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் நேற்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள சூளைவாய்க்கால் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவர் அந்த பகுதியை சேர்ந்த ஒருவரிடம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து ரூ.3 லட்சம் கடன் வாங்கி உள்ளார். இந்த கடன் தொகைக்கு வட்டியுடன் சேர்த்து ரூ.7 லட்சம் கணேசன் செலுத்தியதாக கூறப்படுகிறது. அதன்பிறகும் வீட்டு பத்திரத்தை கொடுக்காமல் வட்டி கேட்டு மிரட்டியுள்ளனர்.

இதுகுறித்து கணேசன் ஏரல் போலீசில் புகார் அளித்து உள்ளார். ஆனால், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

தீக்குளிக்க முயற்சி

இதனால் மனம் உடைந்த கணேசன், அவருடைய மனைவி வேளாங்கண்ணி, மகள் வெட்காளியம்மாள், நட்டார், மகன் செந்தில்குமார் மற்றும் வெட்காளியம்மாளின் 2 கைக்குழந்தைகள் ஆகிய 7 பேரும் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் திடீரென கையில் வைத்து இருந்த மண்எண்ணெயை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

அப்போது அங்கு இருந்த போலீசார் ஓடிவந்து, தற்கொலைக்கு முயன்றவர்களை தடுத்து நிறுத்தி அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர். பின்னர் அவர்களை மீட்டு சிப்காட் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story