கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பணம் வைத்து சூதாடிய 16 பேர் கைது - 8 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணம் வைத்து சூதாடிய 16 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 8 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவசந்திரன் மற்றும் போலீசார் ராசு வீதியில் உள்ள துளுக்காணி மாரியம்மன் கோவில் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிக்கொண்டு இருந்த பிரதாப் (வயது 36), தங்கராஜ் (21), கோவிந்தராஜ் (40), குமார் (29), வடிவேல் (42), மணி (28) ஆகிய 6 பேரையும் கைது செய்தனர். இதேபோல், காவேரிப்பட்டணம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் மலையாண்டஅள்ளி மலை பகுதியில் ரோந்து சென்றபோது அங்கு பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த முனியப்பன்(40), பூவரசன்(25) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். வேப்பனப்பள்ளி போலீசார் கட்டயம்பேடு வனப்பகுதியில் ரோந்து சென்றபோது அங்கு பணம் வைத்து சூதாடிய கர்நாடக மாநிலம் பங்காருபேட்டை அடுத்த கொல்லஅள்ளி கிராமத்தை சேர்ந்த ஹரீஸ் (25), லோகேஷ் (30), தோப்பனப்பள்ளி திம்மப்பா (30), கட்டயம்பேடு சொன்னப்பா (45) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்த ரூ.10 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பேரிகை போலீசார் அலசப்பள்ளி வனப்பகுதியில் ரோந்து சென்றபோது அங்குள்ள ஒரு தாபா ஓட்டலில் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த பீமனப்பள்ளி சீனிவாசா (22), மேன்சன்தொட்டி மகேந்திரன் (22), தேர்பேட்டை குருபிரசாத் (22), சுப்பிரமணி (28) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மாவட்டம் முழுவதும் நேற்று பணம் வைத்து சூதாடியதாக 16 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்த ரூ.12,340 மற்றும் 8 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
Related Tags :
Next Story