திருச்சியில் சாலை விபத்தில் புழல் சிறை ஏட்டு பலி - மனைவி, மகனை பார்க்க விடுப்பில் வந்த போது பரிதாபம்
மனைவி, மகனை பார்க்க விடுப்பில் வந்த போது திருச்சியில் சாலைவிபத்தில் சென்னை புழல் சிறை ஏட்டு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
திருச்சி,
மதுரை மாவட்டம் மேலஅனுப்பானடி பகுதியை சேர்ந்தவர் மாயகிருஷ்ணன் (வயது 31). இவர் சென்னை புழல் சிறையில் ஏட்டாக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி இந்துமதி. இவர் சொந்த ஊரான மதுரையில் வசித்து வருகிறார்.
இந்தநிலையில் மதுரையில் உள்ள தனது மனைவி மற்றும் மகனை பார்க்க, 2 நாட்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு, சென்னையில் இருந்து மோட்டார் சைக்கிளில் மாயகிருஷ்ணன் நேற்று முன்தினம் மாலை மதுரைக்கு புறப்பட்டார். வரும் வழியில் திருச்சி மத்திய சிறைக்கு சென்று, அங்கு பணியாற்றி வரும் தனது நண்பர்களை சந்தித்தார்.
பின்னர், அங்கிருந்து புறப்பட்டு, திருச்சி-புதுக்கோட்டை சாலையில் சுப்பிரமணியபுரம் அருகே சென்றபோது, அவரது மோட்டார் சைக்கிள் சாலையின் நடுவே இருந்த மையத்தடுப்பு சுவரில் மோதியது. இதில் அவர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதைக்கண்ட அந்த பகுதியினர் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தெற்கு போக்குவரத்து புலனாய்வுபிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story