இந்து முன்னணி பிரமுகரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு - ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு


இந்து முன்னணி பிரமுகரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு - ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 13 Aug 2020 3:45 AM IST (Updated: 13 Aug 2020 8:23 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்டத்தில் இந்து முன்னணி பிரமுகரை தாக்கிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

ஜெயங்கொண்டம், 

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம்-சிதம்பரம் ரோட்டில் இருசக்கர வாகனம் பழுதுபார்க்கும் கடை நடத்தி வருபவர் முருகன் என்ற பாலமுருகன் (வயது 48). இவர் இந்து முன்னணி மாநில செயற்குழு உறுப்பினராக உள்ளார். சம்பவத்தன்று இவரது கடை முன்பு ஜெயங்கொண்டம் கீழத்தெருவை சேர்ந்த அன்புச்செல்வன் (26), அவரது மனைவியை குடிபோதையில் தாக்கியதாக தெரிகிறது. 

இதைப்பார்த்த பாலமுருகன் மற்றும் இந்துமுன்னணி நிர்வாகிகள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் அன்புச்செல்வன் தனது சகோதரர்கள் அறிவழகன், அசோக் ஆகியோரை அழைத்து வந்து பாலமுருகனை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து பாலமுருகன் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். 

இந்த நிலையில் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய கோரியும், சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில் இந்து முன்னணி நிர்வாகிகள் 20-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையில் ஜெயங்கொண்டம் போலீசார் பாலமுருகனை தாக்கிய அன்புச்செல்வன், அறிவழகன் (20), அசோக் (30) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர் . 

மேலும் 144 தடை உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதற்காக பாலமுருகன் உட்பட இந்து முன்னணி நிர்வாகிகள் 25 பேர் மீது ஜெயங்கொண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story